சேலம் திருமலைகிரியில் பூட்டப்பட்ட மாரியம்மன் கோவில் திறப்பு-அனைத்து சமூக மக்களும் சாமி தரிசனம்


சேலம் திருமலைகிரியில் பூட்டப்பட்ட மாரியம்மன் கோவில் திறப்பு-அனைத்து சமூக மக்களும் சாமி தரிசனம்
x

சேலம் திருமலைகிரியில் பூட்டப்பட்ட மாரியம்மன் கோவில் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து சமூக மக்களும் சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

இரும்பாலை:

மகா மாரியம்மன் கோவில்

சேலம் திருமலைகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் பண்டிகை நடந்தது. அப்போது பட்டியலின வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் சென்றார். இதனால் அந்த வாலிபரை, தி.மு.க. முன்னாள் நிர்வாகி மாணிக்கம் திட்டி, மிரட்டினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.

இதையடுத்து மாணிக்கத்தை இரும்பாலை போலீசார் கைது செய்தனர். மேலும் கோவில் பூட்டப்பட்டு, பூஜைகள் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில் கோவிலை திறந்து அனைத்து சமூக மக்களும் வழிபட இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அனைத்து சமூக மக்களும் வழிபாடு

அதன்படி நேற்று அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா, சேலம் மேற்கு தாசில்தார் அருள் பிரகாஷ், போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அனைத்து சமூக மக்களும் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவில் பூசாரி மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூட்டப்பட்ட கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி அந்த பகுதியில் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story