ரெயில் நிலையங்களில் புறக்காவல் நிலையம் திறப்பு


ரெயில் நிலையங்களில் புறக்காவல் நிலையம் திறப்பு
x

விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள வள்ளியூர், குழித்துறை ரெயில் நிலையங்களில் புறகாவல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள வள்ளியூர், குழித்துறை ரெயில் நிலையங்களில் புறகாவல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

ரெயில்வே புறக்காவல் நிலையம்

நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், 4-சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 23 போலீசார் பணியில் உள்ளனர்.

நாகர்கோவில் ரெயில்வே கோட்ட எல்லையானது நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் முதல் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை வரை உள்ளது. இந்த நிலையில் குழித்துறை மற்றும் வள்ளியூர் போன்ற பகுதிகளில் தண்டவாளத்தில் விபத்துகள் ஏற்படுவதாகவும், ரெயில்கள் தாமதமாக செல்வதாகவும், குற்றச்செயல்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்தன.

போலீசார் நாகர்கோவிலில் இருந்து சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆவதாக புகார்கள் இருந்து வந்தது. எனவே குழித்துறை மற்றும் வள்ளியூர் ரெயில் நிலையங்களில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

குழித்துறை- வள்ளியூர்

அதன்படி குழித்துறையில் ரெயில் நிலையத்திற்கு உள்ளே நடைேமடையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. அங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதுபோல் வள்ளியூரில் முதலாவது நடைேமடையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் முதல் கட்டமாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்த புறகாவல் நிலையங்கள் நேற்றுமுன்தினம் முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இதன்மூலம் குற்ற செயல்களை தடுக்கவும், ரெயில் விபத்துகளில் உயிரிழப்பு நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணியை மேற்கொள்வதற்கும் இந்த புறகாவல் நிலையங்கள் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.

கூடுதல் போலீஸ் வேண்டும்

குழித்துறை, வள்ளியூரில் புறகாவல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குறைவான போலீசாரே பணியில் இருந்து வருகிறார்கள். எனவே புற காவல் நிலையங்களுக்கு புதிதாக கூடுதல் போலீசாரை நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் அங்கு புறக்காவல் நிலையம் இல்லை. எனவே கன்னியாகுமரியிலும் புறகாவல் நிலையம் திறக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story