மானாமதுரை அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலி காரணமாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நடவடிக்கையின் பேரில் மானாமதுரை அருகே நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
மானாமதுரை,
'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நடவடிக்கையின் பேரில் மானாமதுரை அருகே நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நெல்கொள்முதல் நிலையம்
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கடந்த ஆண்டு நெல் அறுவடையின்போது கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டு நெல் அறுவடை பணிகள் முடிந்த நிலையில் தற்போது மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் விளைவித்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல்மூடைகளை திறந்த வெளியில் ஆங்காங்கே அடுக்கி வைத்துள்ளனர்.
மேலும் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் இந்த நெல்மூடைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்து உடனடியாக நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர் நடவடிக்கை
இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. மேலும் அந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் உடனடியாக நெல்கொள்முதல் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் தகவல் தெரிவித்தார்.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உடனடியாக அங்கு நெல்கொள்முதல் திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார், இதையடுத்து இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் தலைமையில் நெல்கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் 'தினத்தந்தி' நாளிதழுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.