பூமாலை வணிக வளாகம் திறப்பு


பூமாலை வணிக வளாகம் திறப்பு
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.36 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம் திறக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பூமாலை வணிக வளாகத்தை புனரமைக்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் விழுப்புரம் பூமாலை வணிக வளாகம் ரூ.35 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த பூமாலை வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையொட்டி விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில் நடந்த விழாவிற்கு கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன் தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வந்தனர். தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்பு பொருட்களின் முதல் விற்பனையை அவர்கள் தொடங்கி வைத்து தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை பார்வையிட்டனர். பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 58 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள் வாகித்அன்சாரி, விஜயகுமார், கவுதமன், முருகானந்தம், முனியப்பன், ஸ்ரீலதா, கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story