கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,055 பள்ளிகள் திறப்பு: மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்
கோடை விடுமுறை முடிந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2 ஆயிரத்து 55 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி:
கோடை விடுமுறை முடிந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2 ஆயிரத்து 55 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் ஜூன் 13-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், பகுதி நிதி உதவிபெறும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 55 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இனிப்பு, பூ கொடுத்து வரவேற்றனர்.
மலர் தூவி வரவேற்பு
கல்லாவி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மலர் தூவி இனிப்பு வழங்கி வரவேற்றனர். பின்னர் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்த கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பர்குணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், பொருளாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்கப்பள்ளி
ஊத்தங்கரை அருகே உள்ள எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் செல்லம்மாள், சி.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் பாலன், பள்ளி மேலாண்மைக்குழு மாநில கருத்தாளர் வீரமணி ஆகியோர் வரவேற்று வாழ்த்தினர்.
அப்போது கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சந்தோஷ் தனது மகனை தமிழ் வழிக்கல்வியில் முதல் வகுப்பில் சேர்த்தார்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை ஆசிரியை (பொறுப்பு) கீதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சஞ்சய் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினர். தொடர்ந்து மாணவிகள் சேர்க்கை நடந்தது.