மாவட்டங்களில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு


மாவட்டங்களில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
x

மாவட்டங்களில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

கோடை விடுமுறை முடிந்து...

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கடந்த மாதம் 12-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு மறுநாளில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.

மேலும் தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்புகள் பயில உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, ஜூன் 13-ந்தேதி (அதாவது நேற்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

1,321 பள்ளிகள் திறப்பு

அந்த வகுப்புகளை கொண்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் 531 பள்ளிகளும், அரியலூர் மாவட்டத்தில் 790 பள்ளிகளும் என மொத்தம் 1,321 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முன்னதாக அந்த பள்ளிகளில் அரசு அறிவித்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மைப்படுத்தப்பட்டிருந்தது.

ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். 1-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளையும் முதல் நாளில் அவர்களது பெற்றோர்கள் கொண்டு வந்து பள்ளியில் விட்டனர். அவர்கள் முககவசம் அணிந்து வந்தனர்.

இனிப்பு-ரோஜா பூ கொடுத்து வரவேற்பு

பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இனிப்பு, ரோஜா பூ கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சில பள்ளிகளில் சுபகாரியங்களை போன்று மாணவ-மாணவிகளுக்கு சந்தனம், குங்குமம் வழங்கி, பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

சில பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பூத்தட்டுகளால் ஆரத்தி எடுத்தும், கும்ப மரியாதை செலுத்தியும் ஆசிரியர்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்கள் தங்களது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர். புதுவேட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்று இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினர். கடந்த ஆண்டில் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கும், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பொது அறிவு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வேப்பந்தட்டை, பாடாலூர், மங்களமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஆண்டு முழுவதும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக பள்ளியின் நுழைவு வாயிலில் ஆசிரியர்கள் நின்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை இனிப்பு கொடுத்து வரவேற்றனர். உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு சென்ற பின்னர், அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இதேபோல் ஜெயங்கொண்டம், தா.பழூர், திருமானூர், செந்துறை, மீன்சுருட்டி, உடையார்பாளையம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story