ஓமலூர் அருகே பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் மதுக்கடை திறப்பு-போராட்டம் நடத்த திரண்டவர்களுடன் பேச்சுவார்த்தை
ஓமலூர் அருகே பொதுமக்கள் எதிர்ப்ைப மீறி மதுக்கடை திறக்கப்பட்டது. போராட்டம் நடத்த திரண்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஓமலூர்:
மதுக்கடை
ஓமலூர் அருகே பண்ணப்பட்டி ஊராட்சி அம்மாசி கவுண்டர் காட்டுவளவு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மதுபான கடை திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் மதுக்கடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று காலை அங்கு அரசு டாஸ்மாக் மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
போராட்டம் நடத்த திரண்டனர்
இது பற்றி தகவல் அறிந்த பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அந்த பகுதியில் திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் டாஸ்மாக் தாசில்தார் மாதேஸ்வரன் ஆகியோர் பண்ணப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், பா.ம.க.வினர் மதுக்கடையை திறக்க கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். போலீசார், அதிகாரிகள் கூறுகையில், கோர்ட்டில் தடை ஆணை பெற்றுவந்தால், கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பொதுமக்கள் திரண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.