பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
விழுப்புரம், தீவனூர் பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 23-ந் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற உற்சவத்தில் நேற்று பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. அதன் பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) ராப்பத்து உற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதேபோல் திண்டிவனம் அருகே தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் இன்று காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.