காமராஜர் கல்வெட்டு திறப்பு
செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் காமராஜர் கல்வெட்டு திறக்கப்பட்டது.
செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபம் கடந்த 2013-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது திறந்து வைக்கப்பட்டது. தற்போது அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இதனை பராமரித்து வருகிறது. இந்த மணி மண்டபத்திற்கு 1957-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். இதற்கான கல்வெட்டு இங்கு அப்போதே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கல்வெட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருந்துள்ளது.
இதனை செங்கோட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராம் மோகன் கண்டெடுத்து அதனை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதனை மணிமண்டபத்தில் நிறுவ வேண்டும் என்று காமராஜரின் பேத்தியான கமலி காமராஜ் மற்றும் காங்கிரஸ் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 65 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த கல்வெட்டை இவர்கள் இருவரும் திறந்து வைத்தனர். தொடர்ந்து சத்திய சாய்பாபா சேவா சமிதி சார்பில் 96 மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, காங்கிரஸ் மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜ், பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் செயலாளர் கார்வின், செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலட்சுமி, வக்கீல் முருகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.