திருப்பதிசாரம் அருகே 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி திறப்பு
திருப்பதிசாரம் அருகே 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி திறக்கப்பட்டது.
நாகர்கோவில்,
திருப்பதிசாரம் அருகே 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி திறக்கப்பட்டது.
சுங்கச்சாவடி
காவல்கிணறு-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு திருப்பதிசாரம் அருகே புதிதாக சுங்கச்சாவடி உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக செல்லும் கார், ஜீப், வேன், இலகுரக வாகனம், இலகுரக வணிக வாகன வகை, மினி பஸ், பஸ், டிரக், கனரக வாகனங்கள், மணல் ஏற்றி செல்லும் வாகனம் என வாகனங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வணிக பயன்பாடு இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2022-2023-ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.315 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண விவரங்கள் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அருகே இருபுறமும் வைக்கப்பட்டு இருக்கும் பெரிய போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திறக்கப்பட்டது
இந்த சுங்கச்சாவடியானது கடந்த மாதம் 24-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மின் இணைப்பு வழங்கப்படாததால் திறக்கப்படவில்லை. தற்போது இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. அங்கு மிகப்பெரிய உயர்கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்தநிலையில் 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடி நேற்று மாலை முதல் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. சுங்கச்சாவடி வழியாக சென்ற அனைத்து வாகனங்களிடமும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆம்னி பஸ்கள், கனரக வாகனங்கள், கார்கள் என அனைத்து விதமான வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.