சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
குமரி மாவட்டம் சிற்றாறு பட்டணம் கால்வாயில் 3 மாதங்களுக்குப் பின்னர் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
குலசேகரம்,
குமரி மாவட்டம் சிற்றாறு பட்டணம் கால்வாயில் 3 மாதங்களுக்குப் பின்னர் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
கால்வாயில் மண்சரிவு
குமரி மாவட்டத்தில் பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருஞ்சாணி அணையும் திறக்கப்பட்டது. இந்தநிலையில் சிற்றாறு பட்டணம் கால்வாயில் சுவாமியார்மடம் பகுதியில் 2 இடங்களில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதால், சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் இந்த கால்வாயில் தண்ணீர் விடமுடியாத நிலை ஏற்பட்டது.
அத்துடன் தென்மேற்கு பருவ மழையும் பொய்த்துப் போனதால் இந்த கால்வாய் பாசனப்பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயில் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.
தண்ணீர் திறப்பு
இதற்கிடையே பேச்சிப்பாறை அணையில் இருந்து இந்த கால்வாயில் வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் கடந்த 2 வாரங்களாக திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வெள்ளிக்கோடு பகுதி வரை மட்டுமே சென்றது.
தற்போது கால்வாய் சீரமைப்பு பணிகள் குறிப்பிட்ட அளவு நிறைவடைந்த நிலையில் நேற்று பேச்சிப்பாறை அணையில் இருந்து சிற்றாறு பட்டணம் கால்வாயில் வினாடிக்கு 100 கன அடிதண்ணீர் திறக்கப்பட்டது. அத்துடன் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு தோவாளை மற்றும் அனந்தனாறு கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு விடப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, ' இனி வரும் நாட்களில் தேவைக்கேற்ப கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும்' என்றனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
சிற்றாறு பட்டணம் கால்வாயில் 3 மாதங்களுக்குப் பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கால்வாய் பாசனப்பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.