பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு


பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு
x

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ சாகுபடிக்காக, பாபநாசம் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நேற்று 86.25 அடி நீர்மட்டம் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய், ஸ்ரீவைகுண்டம் தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதான கால்வாய் ஆகியவற்றின் மூலம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலஙகள் பாசன வசதி பெறும்.

அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 31-ந்தேதி வரையிலும் 148 நாட்களுக்கு அணையில் நீர் இருப்பை பொறுத்து தேவைக்கு தகுந்தாற்போல் தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மழைக்காலத்தில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை வெள்ளநீர் கால்வாய் மூலம் திசை திருப்பி வறட்சியான நாங்குநேரி, திசையன்விளை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கப்பாண்டியன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், அம்பை தாசில்தார் விஜயா, தாமிரபரணி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், பேச்சிமுத்து, முருகன், உதவி பொறியாளர்கள் மகேஷ்வரன், ஜெய்கணேஷ், பாபநாசம் கீழணை மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளார்கள் அழகுராணி, விஜயராஜ், முத்துகுமாரி, வேளாண்மை அலுவலர் சாகித் முகைதீன், உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story