பிசான சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு: அதிகாரிகள் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடிக்கு வெள்ளஇக்கிழமை பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு: அதிகாரிகள் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பருவமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ள வேண்டும். 2020-21 பயிர்காப்பீடு தொகை பெரும்பாலும் வந்து விட்டது. வடகிழக்கு பருவமையில் இருந்து பயிர்களை பாதுகாப்பதோடு, உயிரிழப்புகள், கால்நடை இழப்புகள் ஏற்படாமலும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சடையநேரி கால்வாய்க்கு கூடுதலாக தண்ணீர் வழங்குவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
உரக்கடை உரிமையாளர்கள் மீது..
கருமேனியாற்றில் உள்ள கருவேலமரங்கள் 2 மாதத்துக்குள் அகற்றப்படும். வெள்ளநீர்க்கால்வாய் திட்டத்தில் கோர்ட்டு வழக்கு முடிந்த உடன், பொதுப்பணித்துறை மூலம் கால்வாய் தோண்டப்படும். சிலர் தடுப்பதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. விவசாயிகள் தான் போராட வேண்டும். அதனை பத்திரமாக வைக்க பஞ்சாயத்து மூலம் ஏதேனும் பொதுவான இடத்தில் லாக்கர் வசதி ஏற்படுத்தலாம். விவசாயிகளுக்கு தேவையில்லாத உரங்களை வாங்க கட்டாயப்படுத்தும் உரக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தண்ணீர் திறப்பு
கூட்டத்தில் அதிகாரிகள் கூறும் போது, கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடம்பாகுளம் மறுகால் ஓடை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் எந்தெந்த பகுதியில் தண்ணீர் செல்வதற்கு தடைகள் உள்ளதோ, அதனை தெரிவித்தால் உடனடியாக சீரமைக்கப்படும். பிசான சாகுபடிக்காக இன்று (வெள்ளிக்கிழமை) பாபநாசம் அணையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 2 ஆயிரத்து 181 டன் யூரியா, 3 ஆயிரத்து 314 டன் காம்ப்ளக்ஸ், 1653 டன் டி.ஏ.பி, 618 டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர ஸ்பிக் யூரியா 500 டன் வழங்கப்பட உள்ளது. வருகிற 10-ந் தேதி கப்பல் மூலம் 40 ஆயிரம் டன் வருகிறது. இதில் 4 ஆயிரத்து 500 டன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கேட்டு உள்ளோம் என்று தெரிவித்தனர்.