விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு ரெயில் இயக்க நடவடிக்கை


விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு ரெயில் இயக்க நடவடிக்கை
x

விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயணியர் வசதிகள் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

ரெயில்வே பயணியர் வசதிகள் குழுவின் தலைவரான முன்னாள் எம்.பி. கிருஷ்ணதாஸ் தலைமையில் ரவிச்சந்திரன், மதுசூதனன், மஞ்சுநாதா, அபிகிஜித்தாஸ், கைலாஷ்லட்சுமண்வர்மா, சுனில்ராம் ஆகியோர் நேற்று விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையை பார்வையிட்ட அவர்கள் அங்கிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அதற்கு கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்துமாறும், குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி தருமாறும் முறையிட்டனர். அதன் பிறகு நடைமேடைகளை பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த குடிநீர் தொட்டிகளின் குழாய்களை திறந்து அதில் வரும் குடிதண்ணீரை குடித்து பார்த்தனர். அதில் தண்ணீரின் சுவை சரியாக இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்துமாறு ரெயில் நிலைய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். அதோடு நடைமேடைகளில் பயணிகள் அமரக்கூடிய இடங்களில் சில இடங்களில் மின்விசிறிகள் இல்லாமல் பயணிகள் சிரமப்பட்டதை பார்வையிட்ட அக்குழுவினர் தேவையான இடத்தில் மின்விசிறிகளை அமைக்குமாறு உத்தரவிட்டனர்.

கூடுதல் முன்பதிவு மையம்

தொடர்ந்து, பயணச்சீட்டு வழங்கும் இடம், முன்பதிவு செய்யும் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது முன்பதிவு செய்ய ஒரேயொரு மையம் மட்டுமே இருப்பதை அறிந்த அக்குழுவினர் கூடுதலாக முன்பதிவு மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து குழுவின் தலைவர் கிருஷ்ணதாஸ், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த ரெயில் நிலையத்திற்கு எக்ஸிலேட்டர் வசதியே வந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் லிப்ட் அமைக்கும் பணி நடைபெறுகிறது. விழுப்புரத்திலும், தாம்பரத்திலும் தேஜஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என ரெயில்வே துறைக்கு சிபாரிசு செய்துள்ளோம். சென்னை- திருச்சி இடையே அந்த்யோதயா ரெயிலையும், திருச்சி- விருத்தாசலம் வரை இயக்கப்படும் ரெயிலை விழுப்புரம் வரை நீடிக்கவும், விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு புதிய ரெயில் இயக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பெற்றுள்ளோம். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி ரெயில்வே துறைக்கு சிபாரிசு செய்ய உள்ளோம் என்றார்.


Next Story