மீனவ மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்


மீனவ மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்
x

தூண்டில் வளைவு அமைக்கும்போது அந்தந்த பகுதி மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தூண்டில் வளைவு அமைக்கும்போது அந்தந்த பகுதி மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி (நிலமெடுப்பு) ரேவதி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். பின்னர் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

குமரி மாவட்டத்தில் கடலரிப்பு நிரந்தர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள், கடல் ஆராய்ச்சியாளர், நிபுணர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும். குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனயம், அழிக்கால், கோவளம், மேல்மிடாலம் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் சரியான முறையில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படவில்லை. கோவளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்போது அந்தப் பகுதி கிராம மக்களின் கருத்துகள் கேட்டு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

கடல் ஆம்புலன்ஸ் வசதி

கேரளாவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு 1000,500 கிலோ எடை கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நமது மாவட்டத்தில் வீடுகளுக்கு கட்ட பயன்படுத்தப்படும் ஜல்லிகளையும், மணல்களையும் போட்டு தூண்டில் வளைவு அமைக்கப்படுவதால் தூண்டில் வளைவுகள் உடனடியாக சேதம் அடைகிறது. இதை முறைப்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க கடல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

கீழமணக்குடியில் தனியார், தொண்டு நிறுவனங்கள் மூலமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 500-க்கு மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வரும் நிலையில் அந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

மேல்முறையீடு

இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-

கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகள் பொதுப்பணித்துறையின் கடலரிப்பு தடுப்புக் கோட்டத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கை தொடர்பாக உரிய கால இடைவெளியில் சிறப்புக் கூட்டம் நடத்திட ஏதுவாக குமரி மாவட்ட கலெக்டரின் அறிவுரை பெற்று கூட்டம் நடத்தப்படும். எல்லை தாண்டி மீன்பிடித்ததற்கான அபராத தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது குமரி மாவட்டத்தை சேர்ந்த 66 படகுகள் தடையைமீறி மீன் பிடித்ததாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏழு பேர் மேல்முறையீடு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக மீனவ மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்திற்கு இரண்டு மீட்பு படகுகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கூட்டத்தில் மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், மீனவர்கள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story