கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில்இ-சேவை மையங்கள் தொடங்க படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில்இ-சேவை மையங்கள் தொடங்க படித்த இளைஞர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இ-சேவை மையங்கள் தொடங்க படித்த இளைஞர்கள் வருகிற 30-ந் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இ-சேவை மையம்
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.
விண்ணப்பிக்கலாம்
இந்த திட்டம் மூலம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 294 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முதல் கட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் விதமாக, தற்போது இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in, www.tnega.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் 30.6.2023 அன்று இரவு 8 மணி வரை http://www.tnesevai.tn.gov.in/CSConlineReg-SchemeandRole.aspxஎன்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக, கிராமப்புறங்களில் உள்ள மையங்களுக்கு ரூ.3 ஆயிரமும், நகர்ப்புற மையங்களுக்கு ரூ.6 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பக் கட்டணத்தை மேற்கூறிய இணையதள முகவரி மூலமாக ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்திட வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனர் எண் மற்றும் கடவுச் சொல், விண்ணப்பத்தில் அவர்களால் வழங்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும். மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை Playstore-ல் உள்ள முகவரி என்னும் ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம். அல்லது http://.tnega.tn.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.