இந்திய கப்பற்படை, கடலோர காவல்படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு வாய்ப்பு


இந்திய கப்பற்படை, கடலோர காவல்படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை, கடலோர காவல்படை உள்ளிட்டவற்றில் சேர கடலோர பாதுகாப்பு குழுமத்தால் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை, கடலோர காவல்படை உள்ளிட்டவற்றில் சேர கடலோர பாதுகாப்பு குழுமத்தால் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு உதவும் வகையில் வழிகாட்டுதல் இலவச சிறப்புப்பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என முதல்அமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு நடந்து முடிந்துள்ளன.

2-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.

கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்பட உள்ள இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள மீனவர்களின் வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

ஊக்கத்தொகை

இந்த விண்ணப்பங்களை மீன்வளத்துறை அலுவலகம், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகம், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேஷன்கடைகள் ஆகியவற்றில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.ஆயிரம் வீதம் பயிற்சிக்கால ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவிதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மீனவ இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம்.


Related Tags :
Next Story