சூழல் உணர் திறன் மண்டலத்தை எதிர்த்து கடைகளில் கருப்பு கொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டம்


சூழல் உணர் திறன் மண்டலத்தை எதிர்த்து  கடைகளில் கருப்பு கொடி ஏற்றி வியாபாரிகள் போராட்டம்
x

சூழல் உணர்திறன் மண்டலத்தை எதிர்த்தும், மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வியாபாரிகள் கருப்பு கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

சூழல் உணர்திறன் மண்டலத்தை எதிர்த்தும், மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வியாபாரிகள் கருப்பு கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சூழல் உணர் திறன் மண்டலம்

நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பகத்தின் கரையோரம் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மாநில அரசுகள் 3 மாதத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கும் படி தெரிவித்தது.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக உறுதியான தகவல் தெரிவிக்கவில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருப்பு கொடி போராட்டம்

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கால அவகாசம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வியாபாரிகள் தங்களது கடைகளில் கருப்புக் கொடிகளை கட்டி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதேபோல் மசினகுடி ஊராட்சி பகுதியிலும் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 29ஆம் தேதி கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரம் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தொடர் போராட்டம்

இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினர் கூறும் போது, சூழல் உணர் திறன் மண்டலத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடையடைப்பு போராட்டத்திற்குப் பிறகு அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story