ஆளும் கட்சியை எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதை பொருட்படுத்த வேண்டியதில்லைஅமைச்சர் துரை முருகன் பேட்டி
அமைச்சர் துரை முருகன் பேட்டி
ஆளும் கட்சியை எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று அமைச்சர் துரை முருகன் கூறினார்.
அண்ணாவை கவர்ந்த பேனா
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக பணி செய்யும் தி.மு.க. வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பெரியார் நகரில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கருணாநிதியின் பேனா சிவாஜிகணேசனை உருவாக்கியது. எம்.ஜி.ஆரை உருவாக்கியது. அண்ணாவிடம் கருணாநிதியை அறிமுகப்படுத்திய போது கால்சட்டையுடன் வந்தார். அவரைப்பார்த்து அண்ணா நீதானா கருணாநிதி. இளமைப்பலி என்ற கட்டுரையை திராவிட நாட்டுக்கு எழுதி அனுப்பியது நான். அதை வெளியிட்டு இருக்கிறேன் பார்த்தாயா என்றார்.
யார் கருணாநிதி என்று அண்ணாவுக்கு தெரியாது. 9-ம் வகுப்பில் சின்னஞ்சிறு சிறுவனாக கருணாநிதி தீட்டிய கட்டுரை அண்ணாவையே கவர்ந்து இழுத்தது. அப்படிப்பட்ட பேனாவின் அடையாளம்தான் வைக்கப்பட உள்ளது. அதை தெரிந்து கொள்ளாமல் கைநாட்டு பேர்வழிகள் எல்லாம் பேனாவைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது படித்தவர்கள் விவகாரம். எடப்பாடி பழனிசாமியை கொஞ்சம் விட்டு விடுங்கள்.
நாம் அத்தனைபேரும் பொதுமக்களை அதிக அளவில் வாக்களிக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் துரை முருகன் பேசினார்.
விமர்சிப்பார்கள்
தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்றால், அவர்கள் எதிர்க்கட்சியினர். எதிர்க்கட்சி எப்போதும் ஆளும் கட்சி சிறப்பானது என்று கூறாது. விமர்சிப்பார்கள். எனவே அவர்கள் சொல்வதை பொருட்படுத்த வேண்டியது இல்லை. அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டியது அ.தி.மு.க.வினர்தான். அவர்களுக்கு நான் சாபம் கொடுக்க தயாராக இல்லை.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.