கழிவுநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு; பணிகளை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்
கோவில் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல்
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், நாகனூர் ஊராட்சியில் உள்ள கம்பத்தாம்பாறை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாததால் கழிவுநீரானது தாழ்வான பகுதிகளில் சென்று தேங்கி நிற்கின்றன.
இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த கழிவுநீர்கள் சென்று தேங்கி நிற்கும் வகையில் நாகனூர் பகவதி அம்மன், காளியம்மன் கோவில் அருகே கழிவுநீர் தொட்டி (உறுஞ்சிக்குழி) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
போராட்டம்
இதனை அறிந்த இப்பகுதி மக்கள் கோவில் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி நேற்று கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தோைகமலை ஒன்றிய ஆணையர் (கிராம ஊராட்சி) மணிமேகலை, நாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.