ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சுடுகாட்டில் கட்டுவதற்கு எதிர்ப்பு


ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சுடுகாட்டில் கட்டுவதற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சுடுகாட்டில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆர்த்தி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 276 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம், ஒரு பயனாளிக்கு இலவச இஸ்திரி பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கூட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் கொடுத்த மனுவில், நத்தம் தாலுகா நத்தம் கோவில்பட்டி ராஜாகுளம் தெருவில் ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட குடியிருப்பில் 30 ஆண்டுகளாக பல குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஒரு வீட்டில் 3 குடும்பங்கள் வசிக்கும் நிலை உள்ளது. எனவே சிரமப்படும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகாரில், கணவரை இழந்த நான் 4 பெண் குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது தம்பியை 4 பேர் தாக்கினர். மேலும் எனக்கு 4 பேரும் சேர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கின்றனர். எனது குழந்தைகளையும் அவதூறாக பேசுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

சுடுகாட்டில் அலுவலகம்

மேலும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து கிராம மக்கள் கொடுத்த மனுவில், பலக்கனூத்து கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இருக்கிறது. இந்த நிலையில் சுடுகாட்டுக்கு உட்பட்ட இடத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு முயற்சி நடக்கிறது. எனவே சுடுகாட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதை கைவிட்டு, பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அங்கேயே புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Next Story