அறச்சலூர் அருகே பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைய எதிர்ப்பு 18 கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் ஆர்ப்பாட்டமும் நடந்தது


அறச்சலூர் அருகே பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைய எதிர்ப்பு  18 கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி  போராட்டம்  ஆர்ப்பாட்டமும் நடந்தது
x
தினத்தந்தி 3 Oct 2022 1:00 AM IST (Updated: 3 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைய எதிர்ப்பு

ஈரோடு

அறச்சலூர் அருகே பால் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

கருப்பு கொடி கட்டி போராட்டம்

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் தனியார் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைய இருப்பதை கண்டித்து நேற்று 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள். மேலும் ராசாம்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதுதொடர்பாக. கோஷங்களும் எழுப்பப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரமும் அங்கு சென்றார். பின்னர் போலீசாரும், தாசில்தாரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது;-

பால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கினால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். இதிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுத்தமாக குடிநீர் ஆதாரத்தை அழித்து விடும். எனவே அரசு தலையிட்டு இந்த பகுதியில் பால் பதப்படுத்தும் ரசாயன தொழிற்சாலை அமைய அனுமதி வழங்கக் கூடாது.

தடுத்து நிறுத்த வேண்டும்

இதுசம்பந்தமாக நாங்களும் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்திருந்தோம். அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. உடனே இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.

அதற்கு தாசில்தார் கூறும்போது, 'நாளை (அதாவது இன்று) ஊர் பொதுமக்கள் 10 பேர் மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்திற்கு வாருங்கள். அங்கு வைத்து உங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்' என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story