போக்குவரத்து நிறைந்த இடத்தில் கருணாநிதி சிலை வைக்க எதிர்ப்பு: திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு


போக்குவரத்து நிறைந்த இடத்தில் கருணாநிதி சிலை வைக்க எதிர்ப்பு: திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நிறைந்த இடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை வைக்க அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் மாநகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் மாலதி, உதவி பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் விவரம் வருமாறு:-

வாக்குவாதம்

சங்கீதா வசந்தராஜ் (அ.தி.மு.க.) :- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அண்ணாபாலம் சிக்னல் அருகே அவரது உருவ சிலை அமைக்கப்படும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த இடத்தில் சிலை அமைத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே அங்கு சிலை அமைக்க அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மேலும் மரக்காணம், செங்கல்பட்டு பகுதியில் விஷச்சாராயம் குடித்து 23 பேர் பலியாகி உள்ளனர். இதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

இதை கேட்டதும் தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கீதா குமரன், விஜயலட்சுமி, செந்தில்குமாரி, ஹேமலதா உள்ளிட்ட கவுன்சிலர்கள், கருணாநிதி சிலை வைக்க எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும், தமிழக அரசை எப்படி குறை கூறலாம் என்றும் கூறி அவரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அவரை பேச விடாமல் குரல் எழுப்பினர்.

சமாதானம்

இதை பார்த்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தஷ்ணா, பரணிமுருகன், சுரேஷ்பாபு, வினோத், அலமேலு ஆகியோரும், தங்களுடைய கவுன்சிலருக்கு ஆதரவாக பேசினர். இதனால் அ.தி.மு.க.- தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, அவர்களை சமாதானம் செய்தார்.

தொடர்ந்து மேயர் சுந்தரி ராஜா பேசுகையில், அனைத்து மக்களாலும் போற்றக்கூடிய தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அதேபோல் மாநிலத்தில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்ததற்காக தமிழக அரசை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடலூர் மாநகராட்சி பகுதியில் எங்கும் சாராயம் விற்கப்படவில்லை என்றார்.

பரபரப்பு

துணை மேயர் தாமரைச்செல்வன் பேசுகையில், கடலூர் மஞ்சக்குப்பத்தில் அனைவரும் போற்றக்கூடிய எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. அங்கு அவரது பிறந்த நாள், நினைவு நாளில் மாலை அணிவிக்கும் போது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது எல்லாம் வருடத்தில் ஒரு நாள் மட்டும் நடக்கும்.

இதேபோல் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு சிலை வைப்பதால் எந்த பிரச்சினையும் வராது. இதற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆகவே இது பற்றி தொடர்ந்து பேச வேண்டாம் என்றார். இதற்கிடையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடந்தது.

பாதாள சாக்கடை

சரவணன் (பா.ம.க.) :- கடலூர் கம்மியம்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக சிலர் திடீரென அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து அளவீடு செய்வதாக கூறுகிறார்கள். அவர்கள் யார் என்பது பற்றி தெரிய வேண்டும். அதேபோல் புதிய வீடுகளுக்கு வரி போடாமல் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதில்லை. இதனால் கடந்த 9 மாதங்களாக புதிய வீடுகள் கட்டியவர்கள் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

மேயர் :- இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை இணைப்பு உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சரிதா (வி.சி.க.) :- குப்பை கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா?

மேயர்:- முதுநகர் வசந்தராயன்பாளையத்தில் குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்.

சில்வர் பீச்

அருள்பாபு (த.வா.க.) :- கடலூர் சில்வர் பீச்சை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளர்:- ரூ.5 கோடியில் சில்வர் பீச்சை அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கீதா (தி.மு.க.) :- கடலூர் செம்மண்டலத்தில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. அங்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

மேயர்:- செம்மண்டலத்தில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிரகாஷ் (தி.மு.க.) :- 3-வது வார்டில் தொடக்கப்பள்ளி மேல் தளம் மோசமாக உள்ளது. இதை சீரமைத்து தர வேண்டும். திரவுபதி அம்மன் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெருவில் புதிய சாலை அமைத்து தர வேண்டும்.

மேயர்:- சாலை வசதி அமைத்து தரப்படும்.

கவிதா (தி.மு.க.) :- மோகன்சிங் வீதி, பங்களா பின்புறம், பனங்காட்டு காலனி ஆகிய இடங்களில உள்ள கழிவறை கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும்.

கிரேசி (தி.மு.க.) :- 17-வது வார்டு வன்னியர்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். 19 மின் கம்பங்களில் மின் விளக்கு பொருத்த வேண்டும்.

மேயர்:- நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுபாஷினி, மகேஸ்வரி, சுமதி, இளையராஜா, பாலசந்தர், ராஜ்மோகன், பிரகாஷ், நடராஜன், சரஸ்வதி, ஆராமுது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story