கடையம் அருகே பறவைகள் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு


கடையம் அருகே பறவைகள் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு
x

கடையம் அருகே பறவைகள் சரணாலயம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள வாகைகுளம் என்ற கிராமத்தில் உள்ள குளத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வகையான ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொரித்து செல்கின்றன. மேலும் இங்கு பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொரிப்பதற்கு வசதியாக அமைவிடமும் உள்ளது. தொடர்ந்து தற்போது வீராசமுத்திரம் ஊராட்சியில் நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கடந்த மாதம் 17-ந் தேதி நேரில் குளத்தை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் வாகைக்குளத்தில் பறவை சரணாலயம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆழ்வார்குறிச்சி சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட வன அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர்கள், கிராம மக்களில் பெரும்பாலானோர் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், இந்த குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கர் நஞ்சை நிலம் பயனடைகிறது. பறவைகள் சரணாலயம் அமைத்தால் நீர்நிலைகள் பாதிக்கப்படும், இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நாங்கள் பறவைகள் வருகை தருவதை தடுக்க வேண்டும் என்று கூறவில்லை என தெரிவித்தனர்.


Next Story