அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு: எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்


அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில்  ஓ.பி.எஸ். மேல்முறையீடு: எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்
x
தினத்தந்தி 28 March 2023 9:45 PM IST (Updated: 28 March 2023 9:49 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்" என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்ட்டுள்ளது. தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story