கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
வேலூர் மத்திய ஜெயில் மருத்துவமனை, வேலூர் பொதுமருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது. ஜெயில் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். ஜெயில் அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
இதில் ஜெயில் டாக்டர் பிரகாஷ் அய்யப்பன், பல் டாக்டர் சரஸ்வதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கைதிகளுக்கு வாய் புற்றுநோய் உள்ளதா என்று பரிசோதனை செய்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 6 பேருக்கு அல்சர், வாய்புண் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் கைதிகள், புகை பழக்கம் மற்றும் புகையிலை பொருட்களில் இருந்து விடுபடவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.