தற்காலிக ஆசிரியர், பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு ஆணை


தற்காலிக ஆசிரியர், பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு ஆணை
x

பழனியாண்டவர் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர், பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு ஆணை வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தியதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இதை தொடங்கி வைத்தார்.

அதன்படி பழனி முருகன் கோவிலின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர், பணியாளர்களுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கல்லூரி, மெட்ரிக் பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றும் 162 ஆசிரியர்கள், 96 பணியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது.

இதன் மூலம் மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், ஆர்.டி.ஓ. சிவக்குமார் மற்றும் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story