ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகள் வைத்துள்ள உரிமையாளர்கள் அவற்றை ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு,
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா, த.மா.கா. சார்பில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜா ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 8 ஆயிரத்து 994 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இதற்கிடையில் கடந்த 4-ந்தேதி மாரடைப்பு காரணமாக திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? அல்லது தி.மு.க.வே நேரடியாக போட்டியிடுமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அத்தொகுதிக்குட்பட்டவர்களிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அம்மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் 2023, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளதால் ஈரோடு (கிழக்கு) தொகுதியில் உள்ள அனைத்து படைக்கல (துப்பாக்கி) உரிமதாரர்களும் அவர்களிடம் உள்ள படைக்கலன்களை (துப்பாக்கிகளை) உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களிலேயோ அல்லது உரிமம்
பெற்ற தனியார் ஆயுத கிடங்கு (Armoury)களிலோ, படைக்கல சட்டம் 1959-ன் பிரிவு 29B-ன்படி ஒப்படைத்து
அதற்கான ரசீதுகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டதற்கான ரசீது
நகல்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியது. தவறினால் படைக்கல சட்டம் 1959-ன் பிரிவு 30 ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி
அலுவலர் / மாவட்ட தெரிவித்துள்ளார்.