நிறுத்தப்பட்ட தார்சாலை பணியை உடனே தொடங்க உத்தரவு
குதிரை வட்டம் கிராமத்தில் நிறுத்தப்பட்ட தார்சாலை பணியை உடனே தொடங்க ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் ஒன்றிய அதிகாரிகளுக்கு, திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.
பந்தலூர்
குதிரை வட்டம் கிராமத்தில் நிறுத்தப்பட்ட தார்சாலை பணியை உடனே தொடங்க 'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் ஒன்றிய அதிகாரிகளுக்கு, திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.
தார்சாலை பணி
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே குதிரைவட்டம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக கூலால் வழியாக எருமாட்டுக்கு சென்று வருகின்றனர். ஆனால் அந்த வழியில் மண்சாலை மட்டுமே உள்ளது. இதனால் மழைக்காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அவரது உத்தரவின்பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குதிரைவட்டம் பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும் கொண்டு வந்து, குவியலாக சாலையில் கொட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
உத்தரவு
இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழிலில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் உத்தரவின்பேரில் ஊராட்சிகளின் திட்ட இயக்குனர் ஜெயராமன் நேரில் சென்று, அந்த சாலையை ஆய்வு செய்தார். பின்னர் தார்சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணா துரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதனால் குதிரைவட்டம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.