இயற்கை பண்ணைய விவசாயிகள் அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்ட இயற்கை பண்ணைய விவசாயிகள் அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட இயற்கை பண்ணைய விவசாயிகள் அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அங்கக சான்று
இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும், அதன் மூலமாக விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கும் தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையால் தரச்சான்று வழங்கப்படுகிறது.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கும்போது அதற்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அதன் இயற்கை தன்மை உறுதி செய்யப்படுகிறது.
மேலும் அங்கக விளைபொருட்களை கூடுதல் விலைக்கு சந்தைப்படுத்த உதவுகிறது. தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்று
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலமாக அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுவதால் இந்த சான்றிதழை கொண்டு அங்கக விளைபொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.
விண்ணப்பிக்கலாம்
அங்கக சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவர குறிப்பு, பண்ணை வரைபடம், மண், நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்த நகல்கள் 3, நில ஆவணம், பட்டா, சிட்டா, நிரந்தர கணக்கு அட்டை நகல், ஆதார் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி மாவட்ட விதை சான்று துறை உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கக சான்றளிப்பிற்கு தனிநபராகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம். அங்கக விளைபொருட்களை பதப்படுத்துவோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.