படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்
விளைச்சலை அதிகரிக்க தற்போது அதிகளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தும் கட்டாய மனப்போக்கு விவசாயிகளிடம் வளர்ந்து வருகிறது. அதுபோல் முழு விளைச்சல் அடையும் முன்பே காய்களை பறித்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் ஆபத்தான மனப்போக்கும் வியாபாரிகளிடம் அதிகரித்து வருகிறது.
இயற்கை விவசாயம்
இதனால் எங்கும் ரசாயனம், எதிலும் ரசாயனம் என்ற நிலை உருவாகி, நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் நஞ்சாக மாறி வருகின்றன. இயற்கையோடு மனிதர்கள் இணைந்து வாழ்ந்தபோது ஆபத்துகள் பெரிதாய் வந்தது இல்லை. அவர்கள் செயற்கையோடு கைகோர்த்த பிறகு ஆபத்துகளுக்கு பஞ்சமே இல்லை.
இப்போது மக்கள் இதை உணர தொடங்கி விட்டார்கள். படித்தவர்கள் மத்தியில் இதில் ஓர் எழுச்சியும் ஏற்பட்டு வருகிறது. அவர்களில் பலர் குழுக்களாக செயல்பட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்களின் கருத்துக்களை பார்ப்போம்.
பருவம் தவறாமல் மழை பெய்கிறது
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள முருக்கன்குடியை சேர்ந்த பட்டதாரி இயற்கை விவசாயி மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை தொழில்முனைவோருமான கோபிநாத்:- எங்களுக்கு 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலங்களில் தேக்கு, தைலமரம், மலைவேம்பு ஆகியவற்றை நட்டு பராமரித்து வருகிறோம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் இருந்து இயற்கை தன்னை தானே சுத்திகரித்து கொண்டுள்ளதால், தற்போது பருவம் தவறாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நாங்கள் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளோம். மீதமுள்ள 5 ஏக்கரில் மண்வளத்தை பாதுகாக்கும் வகையில் ரசாயன உரத்தையும், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லியை அதிகம் பயன்படுத்தாமல் எரு, கொட்டை புண்ணாக்கு, பசுஞ்சாணம், தேக்குமர இலைகளை மக்கவைத்து, அவற்றை இயற்கை உரமாக நிலத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இதனால் மண்ணின் தன்மை இயற்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் மாறிவருகிறது. அதற்கு ஏற்றால்போல படிப்படியாக மாற்றுப்பயிர்களை ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது தேக்கு, பாக்கு, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். நவீன அறிவியல் யுகத்தில் ரசாயன உரம், விதையில்லாமல் விளையும் பழங்கள், காய்கறிகளை உட்கொள்வதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு மலட்டுதன்மை அதிகம் ஏற்படுகிறது. இயற்கை முறை விவசாயத்தால், இந்த குறைபாடுகளை நாம் அகற்றிடமுடியும். மக்களிடையே தற்போது சிறுதானிய உணவுகளையும், ஆர்கானிக் முறையில் பயிராகும் காய்கறிகளையும் விரும்பி வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளும் இயற்கை விவசாயத்திற்கு மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
பாரம்பரிய நெல் ரகங்கள்
பெரம்பலூர் உப்போடையை சேர்ந்த போதி பகவன்:- நான் எம்.இ. படித்து விட்டு கடந்த 2008-ம் ஆண்டு முதல் எனது பெற்றோருடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். நாங்கள் பயிர் செய்த வயல் குத்தகை நிலம் என்ற போதும் இயற்கை முறையிலேயே பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டோம். குறிப்பாக அறுபதாம் குருவை மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை, ஆத்தூர் கிச்சடி சம்பா, ஆற்காடு கிச்சடி சம்பா, கருப்பு கவுனி சீரக சம்பா, பெரம்பலூர் மாவட்ட நெல் ரகமான கள்ளிமடையான் என்கிற நெல் ரகங்களையும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்டறிந்து பயிர் செய்து அதிக மகசூல் எடுத்தோம். அதனைத் தொடர்ந்து பாரம்பரிய சிறுதானியங்களையும் மானாவாரி நிலத்தில் பயிர் செய்தோம். குறிப்பாக குதிரைவாலி, தினை, கேழ்வரகு, கம்பு, காடக்கண்ணி, பனி வரகு, வரகு ஆகியவற்றை எந்தவொரு ரசாயன உரங்களும் பயன்படுத்தாமல் இயற்கை முறையிலே விளைவித்தோம். வீட்டிற்கு தேவையான பருப்பு வகைகளான துவரை, பாசிப்பயிறு, உளுந்து, எண்ணெய் வித்துக்களான கொட்டை முத்து, நிலக்கடலை, எள்ளு ஆகிய பயிர்களையும் இயற்கை வழி வேளாண்மையில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி பயிர் செய்து வீட்டு பயன்பாட்டிற்கு போக மீதமுள்ளதை தெரிந்தவர்களுக்கு விற்று விட்டோம். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து முகநூல், வாட்ஸ் அப் வழியில் பதிவிடுவதை பார்த்த எண்ணற்ற விவசாயிகள் எங்களை தொடர்பு கொண்டு விதைகள் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு விதைகளை வழங்கி வருகிறோம். மேலும், இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களை தேடி கண்டறிந்து அவர்களுக்கு தேவையான இடுபொருள்கள், விதைகள் தர ஆரம்பித்தோம். தற்போது பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டல் விதமாக கைக்குத்தல் அரிசி ஆலையும் அமைத்துள்ளோம். இது மட்டுமின்றி விவசாயிகள் தங்கள் வயலில் உற்பத்தி செய்த உணவுப் பொருட்கள், விதைகள் ஆகியவற்றை நேரடியாக விற்பனை செய்வதற்கு விற்பனை அங்காடியை நடத்தி வருகிறோம்.
நிலம், தண்ணீர் பாதிப்பு
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இயற்கை விவசாய ஆர்வலருமான சாந்த ஷீலா நாயர்:- நம் நாட்டில் முதலில் இயற்கை விவசாயம்தான் நடைமுறையில் இருந்து வந்தது. நாம்தான் பசுமைப்புரட்சி கொள்கையை கொண்டு வந்து அதற்காக செயற்கை முறை விவசாயத்தை கொண்டு வந்தோம். இதற்காக செயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்தோம். அதுவும் நமக்கு அதிகளவிலான உற்பத்தியை கொடுத்தது. அதுவே, காலப்போக்கில் கூடுதலான ரசாயன உரங்களை கலந்ததால் நிலம் மற்றும் தண்ணீரில் பாதிப்பு ஏற்பட்டது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களில் ரசாயன பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. தற்போது, தானியங்களுக்காக உணவு பாதுகாப்பு முறை இருக்கிறது.
அதே நேரத்தில் நிலத்தையும், நீரையும் பாதுகாக்க நாம் செயற்கை முறை விவசாயத்தை குறைத்து இயற்கை விவசாயத்தை கொண்டு வர வேண்டும். அதை மறுபடி கொண்டு வந்தால்தான் விளைச்சல் அதிகமாகும். பூமியை மீண்டும் உயிரோட்டம் உடையதாக கொண்டுவர வேண்டுமானால் அது இயற்கை விவசாயத்தால் தான் முடியும்.
இயற்கை விவசாயத்தில் விளைச்சல் குறைவு என்பதால் விவசாயிகள் அதனை முன்னெடுக்க வருவதில்லை. ஆனால், தற்போது இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் இயற்கை விவசாயத்திலும் அதிகளவில் விளைச்சல் பண்ண முடியும் என்று கருதுகின்றனர். உற்பத்தி குறைவாகவே இருந்தாலும், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களின் தரம் அதிகமாக இருப்பதால் அதனை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
இயற்கை விவசாயத்தை தொடர்ச்சியாக செய்தால், காலப் போக்கில் செயற்கை விவசாயத்தின் அளவிற்கு இயற்கை விவசாயத்திலும் மகசூல் கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் உரத்தின் விலை குறைகிறது. தண்ணீரின் தேவையும் குறைகிறது. இதனால் உற்பத்தி செலவு குறைகிறது. நெல், கோதுமை உற்பத்தியை நாம் எப்படி ஊக்குவித்தோமோ அதே போன்று இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். சிக்கிம் மாநிலத்திலும், பூட்டான் நாட்டிலும் தற்போது இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள்.
செயற்கை விவசாயத்தில் ரசாயனம் அதிகரிக்க அதிகரிக்க மண் வளம் குறைந்து உற்பத்தி குறைந்து வருகிறது. மீண்டும் இயற்கை விவசாயத்தை செய்வதின் மூலம் மட்டுமே மண் வளத்தை ஆரோக்கியமாக மாற்றி அதிக மகசூலை பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.