படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்-இயற்கை ஆர்வலர்கள் கருத்து


படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்-இயற்கை ஆர்வலர்கள் கருத்து
x

படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம் குறித்து இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துளளனர்.

திருப்பத்தூர்

படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம் குறித்து இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துளளனர்.

விளைச்சலை அதிகரிக்க தற்போது அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தும் மனப்போக்கு விவசாயிகளிடம் வளர்ந்து வருகிறது. அதுபோல் முழு விளைச்சல் அடையும் முன்பே காய்களை பறித்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் ஆபத்தான மனப்போக்கு வியாபாரிகளிடம் அதிகரித்து வருகிறது. இதனால் எங்கும் ரசாயனம் எதிலும் ரசாயனம் என்ற நிலை உருவாகி, நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் நஞ்சாக மாறி வருகின்றன.

இயற்கையோடு மனிதர்கள் இணைந்து வாழ்ந்தபோது ஆபத்துகள் பெரிதாய் வந்தது இல்லை. அவர்கள் செயற்கையோடு கைகோர்த்தப் பிறகு ஆபத்துகளுக்கு பஞ்சமே இல்லை.

இப்போது மக்கள் இதை உணரத் தொடங்கி விட்டார்கள். படித்தவர்கள் மத்தியில் இதில் ஓர் எழுச்சியும் ஏற்பட்டு வருகிறது. அவர்களில் பலர் குழுக்களாக செயல்பட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்களின் கருத்துக்களை பார்ப்போம்.

நிலம், தண்ணீர் பாதிப்பு

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இயற்கை விவசாய ஆர்வலருமான சாந்த ஷீலா நாயர் கூறியதாவது:-

நம் நாட்டில் முதலில் இயற்கை விவசாயம்தான் நடைமுறையில் இருந்து வந்தது. நாம்தான் பசுமைப்புரட்சி கொள்கையை கொண்டு வந்து அதற்காக செயற்கை முறை விவசாயத்தை கொண்டு வந்தோம். இதற்காக செயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்தோம். அதுவும் நமக்கு அதிக அளவிலான உற்பத்தியை கொடுத்தது.

அதுவே, காலப்போக்கில் கூடுதலான ரசாயன உரங்களை கலந்ததால் நிலம் மற்றும் தண்ணீரில் பாதிப்பு ஏற்பட்டது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களில் ரசாயன பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. தற்போது, தானியங்களுக்காக உணவு பாதுகாப்பு முறை இருக்கிறது.

அதே நேரத்தில் நிலத்தையும், நீரையும் பாதுகாக்க நாம் செயற்கை முறை விவசாயத்தை குறைத்து இயற்கை விவசாயத்தை கொண்டுவர வேண்டும். அதை மறுபடியும் கொண்டு வந்தால்தான் விளைச்சல் அதிகமாகும். பூமியை மீண்டும் உயிரோட்டம் உடையதாக கொண்டுவர வேண்டுமானால் அது இயற்கை விவசாயத்தால் தான் முடியும்.

இயற்கை விவசாயத்தில் விளைச்சல் குறைவு என்பதால் விவசாயிகள் அதனை முன்னெடுக்க வருவதில்லை. ஆனால், தற்போது இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் இயற்கை விவசாயத்திலும் அதிக அளவில் விளைச்சல் பண்ண முடியும் என்று கருதுகின்றனர். உற்பத்தி குறைவாகவே இருந்தாலும், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களின் தரம் அதிகமாக இருப்பதால் அதனை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

இயற்கை விவசாயத்தை தொடர்ச்சியாக செய்தால், காலப் போக்கில் செயற்கை விவசாயத்தின் அளவிற்கு இயற்கை விவசாயத்திலும் மகசூல் கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் உரத்தின் விலை குறைகிறது. தண்ணீரின் தேவையும் குறைகிறது. இதனால் உற்பத்திச் செலவு குறைகிறது. நெல், கோதுமை உற்பத்தியை நாம் எப்படி ஊக்குவித்தோமோ அதே போன்று இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். சிக்கிம் மாநிலத்திலும், பூட்டான் நாட்டிலும் தற்போது இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள்.

செயற்கை விவசாயத்தில் ரசாயனம் அதிகரிக்க அதிகரிக்க மண் வளம் குறைந்து உற்பத்தி குறைந்து வருகிறது. மீண்டும் இயற்கை விவசாயத்தை செய்வதன் மூலம் மட்டுமே மண் வளத்தை ஆரோக்கியமாக மாற்றி அதிக மகசூலை பெற முடியும் என்பது தான் எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

மூட்டு வலியை போக்கிய முருங்கை

இந்திய ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானியும், இயற்கை விவசாய ஆர்வலருமான ஹரிநாத் காசி கணேசன் கூறியதாவது:-

நான் ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையில் ராணுவ வீரர்களுக்கான மருந்துகளை கண்டுபிடித்து வந்தேன். பின்னர் அமெரிக்காவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் இதய நோய்க்கு புதுப்புது மருந்துகளை கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சி செய்து வந்தேன். அப்போது, எனது தாயார் தீராத மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியால் சிரமப்பட்டு வந்தார். இதற்காக ஏராளமான வலிநிவாரண மருந்துகளை உட்கொண்டு வயிற்றுப்புண் ஏற்பட்டு சாப்பிடுவதற்கு சிரமப்பட்டார்.

இந்த நிலையில், எதற்கும் கட்டுப்படாத எனது தாயாரின் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியானது முருங்கை இலையை சூப் வைத்து ஒரு வாரம் சாப்பிட்டதில் சரியானது. இதைத் தொடர்ந்து நான் முருங்கையை ஆராய்ச்சி செய்ததில் அதில் வீக்கத்தை போக்குகிற தன்மை, வலி நீக்கும் தன்மை இருப்பதை அறிந்தேன். அதைத்தொடர்ந்து இயற்கை விவசாயத்தை கற்றுக்கொள்ள விரும்பினேன். இயற்கை விவசாயத்தில் நாம் செடியை வளர்க்கவில்லை. மாறாக மண்ணை வளர்க்கிறோம். இதனால், மண் போதுமான உயிர்ப்பு தன்மை மற்றும் வளத்தை அடைகிறது. அதில் இருந்து செடிகள் எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களையும் பெற்று முழுமையாக வளர்கிறது. இத்தகைய விளைபொருட்களின் மூலம் எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.

மறைமலைநகர் அருகே ஒரு ஏக்கர் நிலத்தில் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி போன்ற பாரம்பரிய நெற்களை பயிரிட்டு வருகிறேன். மேலும் முருங்கை மற்றும் 12 மூலிகைகள் அடங்கிய மதிப்பு கூட்டப்பட்ட உணவே மருந்தான கூட்டுப்பொருளை தயாரித்து மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறேன். இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தைவிடவும் மனநிறைவு மற்றும் அதிகமான வருமானமும் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு

வேலூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மோகன்:-

தோட்டக்கலைத் துறை சார்பில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 260 விவசாயிகள் 740 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் ஒரு வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு இயற்கை விவசாயம் தொடர்பான பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இயற்கை விவசாயிகளுக்கு ஓராண்டிற்கு இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு இயற்கை விவசாயம் செய்வதற்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. விவசாயி ஒருவர் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயற்கை முறையில் விவசாயம் செய்தால் அந்த நபர்களுக்கு தமிழக அரசின் மூலம் இயற்கை விவசாயி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து அறிந்து கொண்ட இளைஞர்கள் பலர் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

திருப்பத்தூரை சேர்ந்த டாக்டர் அருண் திலீப்:- விவசாய நிலத்தில் கரும்பு, பருத்தி, மஞ்சள், நெல், கேழ்வரகு, உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை பயிரிட்டு வருகிறோம். நான் டாக்டருக்கு படித்திருந்தாலும் விவசாயத்தின் மீதான ஆர்வம் காரணமாக தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். பூச்சி மருந்து இல்லாத இயற்கை விவசாயத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகிறேன். விவசாயத்தை கண்ணும் கருத்துமாக பார்த்தால் கண்டிப்பாக லாபம் வருகிறது. தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவேன்.

ஊட்டச்சத்து

வந்தவாசி அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் கே.ஹேம்நாத்:- அத்திப்பாக்கம் கிராமத்தில் 7 ஏக்கரில் அனைத்து வகையான பழ மரங்கள் நட்டுள்ளோம். ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை இடுபொருட்களான ஜீவாமிர்தம், மீன் அமிலம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அதே போல் ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை பூச்சி விரட்டிகளான அக்னி அஸ்திரமம், (பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி கரைசல்) போன்றவைகளை பயன்படுத்துகிறோம். இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் விளைபொருட்கள் ஊட்டச்சத்து, ஆரோக்கியம், சுற்றுச்சூழலுக்கு நல்லது. எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதது. விவசாய நிலத்தை பராமரிப்பதற்காக எருதுகள் பயன்படுத்தப்பட்டன. கால்நடைகளின் கழிவுகள் மற்றும் தாவர கழிவுகள் மண்ணை வளப்படுத்தி பாதுகாத்தன. மண்புழு, பசுந்தாள், சாணம், உதிர்ந்த இலைகள், மக்கும் குப்பைகள், உபயோகப்படுத்தப்பட்ட டீத்தூள் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் உடலுக்கு தீங்கற்ற உணவு கிடைக்கிறது.

நோய்களை தவிர்க்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டம் எடப்பாளையம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி பெ.சுந்தரமூர்த்தி:- நான் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தேன். தொழிற்சாலை மூடப்பட்டதால் வேறு தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லாமல் விவசாயம் செய்ய முற்பட்டேன். ரசாயன கலப்பில்லாமல் உணவுகளை மக்களுக்கு தரும் நோக்கத்தில், எனக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நெல், நிலக்கடலை உள்ளிட்டவைகளை இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறேன். இயற்கை முறையில் பயிரிட்ட நெல்களை அரிசியாக்கிட, இங்கு அதற்கான அரிசி ஆலைகள் இல்லை. எனவே நானே சொந்தமாக எந்திரம் வாங்கி, கைக்குத்தல் அரிசி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறேன். இயற்கை விவசாயப் பொருட்களை சாப்பிட்டால் பெரும்பாலான நோய்களை தவிர்க்க முடியும். இதை உணர்ந்து இன்றைக்கு இளைஞர்கள் நிறைய பேர் கைநிறைய சம்பாதிக்கும் தங்கள் வேலைகளை விட்டு விட்டு, இயற்கை விவசாயத்திற்கு திரும்பி உள்ளனர். பாரம்பரியமிக்க இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். அரசாங்கம் இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து மானியம் முதலிய சலுகைகளை கூடுதலாக வழங்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

கலவையை அடுத்த கலவை புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற ரா.ரமேஷ்:- இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் உடல்நலம் காக்கப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயின்றி காக்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் படித்தவர்கள் கூட விவசாயத்தை விரும்பி செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் வருமானம் பெருகி வாழ்வில் பல வளங்கள் பெற முடிகிறது. பூ, காய்கனி போன்றவற்றின் விளைச்சல் அதிகரிக்கும் போது விலை குறைகிறது. இதனால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் விவசாய விளை பொருட்களை பாதுகாத்து விலை அதிகரிக்கும் போது விற்கும் வகையில் குளிர் பதன கிடங்கு உருவாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாய பயிற்சியாளர் ராஜேந்திரன்:-

இன்றைய காலக்கட்டத்தில் இயற்கை வேளாண்மை மிக அவசியமானதாகும். உடல்நலத்தையும், மண்வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாப்பதில் இயற்கை விவசாயம் மையப்பொருளாக உள்ளது. கிராம பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய ஒன்று இயற்கை வேளாண்மை மட்டும் தான். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. இயற்கை வேளாண்மையை மத்திய அரசும், தமிழக அரசும் ஊக்குவிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் நேரடியாக அந்த விவசாயிகளுக்கு சென்றடையக் கூடியதாக அமையும். அழிந்து வரும் விவசாயத்தை, இயற்கை விவசாயத்தின் மூலம் காப்பாற்ற முடியும்.

போளூரை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன்:-

அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது மகிழ்ச்சியாக உள்ளது. செயற்கை விவசாய முறையில் அதிகப்படியான ரசாயன உரங்களை நிலத்தில் கொட்டி நிலத்தினுடைய தன்மையை மாற்றி விட்டனர். இதனால் பொது மக்கள் பல்வேறு விதமான நோய்க்கு ஆளாகின்றனர். உரத்தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்திக்கின்றனர். இயற்கை விவசாயத்தால் மனிதன் நோய் நொடி இன்றி நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

லாபம் கிடைக்கிறது

லத்தேரியை அடுத்த சென்னாரெட்டியூரை சேர்ந்த இயற்கை விவசாயி கு.ரமேஷ்:- நாவல், சப்போட்டா போன்ற பழவகைகளை கடந்த 40 ஆண்டுகளாக பயிர் செய்து வருகிறேன். அதிக மகசூல் தரவேண்டும் என்பதற்காக ரசாயன உரங்களை போட்டது இல்லை. விஷம் நிறைந்த பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தது கிடையாது. இதுபோன்ற பூச்சிக்கொல்லி, உரங்களுக்காக கடன்பட்டு திவாலான பல விவசாயிகளை பார்த்திருக்கிறேன். எங்களுக்கு இது போன்ற செலவுகள் இல்லை. எதிர்பார்த்த லாபம் கிடைக்கிறது. உடல் உழைப்பை மட்டுமே நம்பி பயிர் செய்து வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை விலைகொடுத்து வாங்கும் நுகர்வோர் மகிழ்ச்சியாக, சுவை உணர்ந்து ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்க வேண்டும். என்பதற்காகவே இயற்கை விவசாய முறையில் தானாகவே பழுத்த பழங்களை விற்பனை செய்கிறோம். தேங்காய்களை கூட நாங்கள் பறிப்பது கிடையாது. அதுவாகவே தானாக கீழே விழும் போது தான் எடுத்து பயன்படுத்துகிறோம். அதிலிருந்து மிக சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறோம். இதற்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. நாளுக்கு நாள் இயற்கை வேளாண்மையை நோக்கி மக்கள் வருவது மன நிறைவை அளிக்கிறது. இது இயற்கை வேளாண்மை செய்து வரும் எங்களை போன்ற எல்லா விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story