வண்டலூர் உயிரியல் பூங்காவில் 33 முட்டைகளிட்ட நெருப்புக்கோழிகள்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் 33 முட்டைகளிட்ட நெருப்புக்கோழிகள்
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 நெருப்புக்கோழிகள் 33 முட்டைகளை இட்டது. இன்னும் 15 நாட்களில் குஞ்சு பொரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1,977 வனவிலங்குகள் மற்றும் நெருப்புக் கோழிகள் உட்பட பறவை இனங்கள் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 4 நெருப்புக்கோழிகள் சமீபத்தில் 33 முட்டைகளை இட்டன. இந்த 33 முட்டைகளை தலா 11 முட்டைகள் என 3 பிரிவுகளாக ஊழியர்கள் பிரித்து வைத்தனர். இந்த முட்டைகளை நெருப்புக்கோழிகள் இயற்கையான முறையில் அடைகாத்து வருகின்றன. இன்னும் 15 நாட்களில் ஒரு பிரிவில் உள்ள 11 முட்டைகளில் இருந்தும் குஞ்சுகள் வெளியே வரும். மற்ற 2 பிரிவுகளாக உள்ள தலா 11 முட்டைகளில் இருந்தும் படிப்படியாக குஞ்சுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நெருப்புக்கோழியை தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ஆண்டுக்கு 140 முட்டைகள்

நெருப்புக்கோழி தனது முட்டைகளை 42 நாட்கள் அடைகாக்கும். ஒரு நெருப்புக்கோழி எடை 160 கிலோ ஆகும். சுமார் 7 அடி உயரம் வரை வளரும், மிக வேகமாக மணிக்கு 7 கிலோமீட்டர் ஓடக்கூடியது. ஒரு நெருப்புக்கோழியின் குஞ்சு எடை 900 கிராம் ஆகும். இதன் முட்டையின் எடை 2 கிலோவில் இருந்து 3 கிலோ வரை இருக்கும். இந்த நெருப்புக்கோழி ஆண்டு முழுவதும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முட்டைகளை போடும், ஒரு ஆண்டுக்கு சுமார் 140 முட்டை வரை போடும். இந்த கோழி இறைச்சி, தோல் மற்றும் முட்டைக்காக வேட்டையாடப்படுகிறது.

பறவைகளிலே மிகபெரியதும் மிகப்பெரிய முட்டை இடக்கூடியதாகும். ஆப்பிரிக்காவில் பரந்த நிலப்பகுதிகளும், சவனா புல்வெளி பகுதிகளிலும் காணப்படும் நெருப்புக்கோழிகள் இயற்கையான முறையில் அடைகாத்து குஞ்சு பொரிப்பது மிகவும் அரிதாகும்.

இந்தியாவிலேயே முதல்முறையாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் தான் நெருப்புக்கோழி இயற்கையான முறையில் அடைகாத்து குஞ்சுகளை பொரித்து வருகிறது. இதனால் பூங்காவில் நெருப்புக்கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்த காரணத்தால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள பூங்காவுக்கு நெருப்புக்கோழி கொடுத்து. அதற்கு பதில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பல்வேறு விலங்குகளை பூங்கா நிர்வாகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக்கோழிகள் உள்ளன.


Next Story