ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் ஆவணி கொடை விழா
சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் ஆவணி கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வள்ளியூர்:
தென் மாவட்டங்களில் உள்ள சுடலை கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆவணி மாத 3-வது வெள்ளிக்கிழமை கொடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவிலில் இந்த ஆண்டு ஆவணி கொடை விழா கடந்த 25-ந்தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது.
கடந்த 31-ந்தேதி மாலையில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் கன்னியாகுமரியில் இருந்து தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
மதியம் விநாயகர் கோவில் மற்றும் அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுடலை ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவில் சுவாமி மயானம் சென்று வந்து சாமபடைப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி சுடலை ஆண்டவர் கலையரங்கத்தில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியரின் திரைப்பட இன்னிசை கச்சேரி, கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது. காமராஜர் கலையரங்கத்தில் 'குடும்ப முன்னேற்றத்திற்கு காரணம் ஆண்களின் சம்பாத்தியமா? பெண்களின் சாமர்த்தியமா?' என்ற தலைப்பில் இசை பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் பொங்கல் வழிபாட்டுடன் சிறப்பு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் சிறுமளஞ்சி இந்து நாடார் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.