புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடக்கம்
கிருஷ்ணகிரி பழைய மாவட்ட மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி பழைய மாவட்ட மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புறநோயாளிகள் பிரிவு
கிருஷ்ணகிரி நகரில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் நகரில் செயல்பட்டு வந்த பழைய மாவட்ட மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
இது குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 50 படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தர வேண்டும் என நேரில் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து நகரில் உள்ள பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்படுத்த சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
அந்த ஆணையில், கிருஷ்ணகிரி பழைய மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள கட்டிடங்களை பயன்படுத்தி உள்நோயாளிகள் பிரிவு மற்றும் இதர சிகிச்சை பிரிவு செயல்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பணியாளர் மற்றும் உபகரணங்கள் ஒப்படைக்க அரசின் அனுமதி ஆணை பெறப்படும் வரையில் புறநோயாளி பிரிவை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என இணை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நகரில் உள்ள பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புறநோயாளி பிரிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.