110 ஆண்டுகள் கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி
கொள்ளிடம் ரெயில் நிலையத்தில் 110 ஆண்டுகள் கடந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சி அளிக்கிறது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் ரெயில் நிலையத்தில் 110 ஆண்டுகள் கடந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சி அளிக்கிறது.
நீர்த்தேக்கதொட்டி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரெயில் நிலையத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. சிமெண்டு கான்கிரீட் கொண்டு எழுப்பப்பட்டுள்ள கட்டிட்த்தின் மேல் இரும்பினால் இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தண்ணீரின் அளவை காட்டும் மிதவையும் உள்ளே அமைந்துள்ளது. இந்த மிதவை தண்ணீர் குறைவதையும் அதிகப்படுத்துவதையும் வெளிப்புறத்தில் உள்ள அளவியல் குறியீடு மூலம் காட்டும்.
இந்தத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு அருகில் பெரிய ஆழ் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று வரை தண்ணீர் உப்பு நீராக மாறாமல் நன்னீராகவே இருந்து வருகிறது. விழுப்புரத்திலிருந்து திருச்சி மார்க்கமாக குறுகிய ரெயில் பாதையில் ரெயில்கள் சென்று கொண்டிருந்த போதும், நீராவி என்ஜின் ரெயில் சென்று கொண்டிருந்தபோதும் அதில் தண்ணீரை ஏற்றுவதற்கு இந்த தொட்டியில் இருந்து தண்ணீரை ஏற்றி செல்வது வழக்கமாக இருந்து வந்தது.
110 ஆண்டுகள்
குறிப்பாக விழுப்புரத்திலிருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் தண்ணீர் பிடித்துச் செல்லும் முக்கிய இடமாக கொள்ளிடம் ரெயில் நிலையம் இருந்து வந்தது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு எழுப்பப்பட்டுள்ள கான்கிரீட் சுவர்களும், இரும்பு தொட்டியும் அதன் உண்மை தன்மை குறையாமல் அப்படியே இருந்து வருகிறது. இன்று தண்ணீரை பயன்படுத்துவதற்கு இந்த தொட்டி பயன்படாவிட்டாலும், அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளித்து வருகிறது.
கடந்த 1912 -ம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த நீர்த்தேக்க தொட்டி 110 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக இருந்து வருவது தரமான கட்டுமானத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. எனவேதான் ரெயில்வே நிர்வாகம் சார்பில் இதனை அழகு குறையாமல் பாதுகாத்து வருகின்றனர். இதனை அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர்.