தேனியில் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் களைகட்டிய கடைவீதிகள்


தேனியில் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் களைகட்டிய கடைவீதிகள்
x

தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, பொருட்கள் வாங்க அலைேமாதிய மக்கள் கூட்டத்தால் கடைவீதிகள் நேற்று களைகட்டியது.

தேனி

தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, பொருட்கள் வாங்க அலைேமாதிய மக்கள் கூட்டத்தால் கடைவீதிகள் நேற்று களைகட்டியது.

அலைமோதிய கூட்டம்

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி தேனி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பட்டாசுகள் வாங்கவும், புத்தாடைகள் எடுக்கவும், இனிப்புகள் வாங்கிச் செல்லவும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைவீதிகளில் குவிந்தனர்.

சாலை ஓரங்களில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. சில நாட்கள் மழை பெய்ததால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தீபாவளி சீசன் விற்பனை மழையால் பாதிக்கப்பட்டதை நினைத்து கலங்கினர். ஆனால் கடந்த 2 நாட்களாக மழை இல்லை. இது சாலையோர வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

பட்டாசுகள் விற்பனை

இதற்கிடையே தேனி நகரில் உள்ள கடைவீதிகளிலும், பிரதான சாலைகளிலும் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பட்டாசு கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். அப்போது விதவிதமான பட்டாசுகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். அதேபோல் பலகாரங்கள் வாங்க பேக்கரிகளில் மக்கள் முண்டியடித்தனர்.

பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் தேனி நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டனர்.

இதேபோல் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட நகரங்களிலும் ஜவுளி, பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.


Related Tags :
Next Story