தேனியில் புத்தாடை, பட்டாசு வாங்குவதற்கு கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்; சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடை, பட்டாசு வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடை, பட்டாசு வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவை தவறாமல் இடம் பெறும். தேனியில் உள்ள கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக புத்தாடை வாங்கவும், பட்டாசு வாங்கவும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஜவுளிக்கடை, பேக்கரி, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில் தேனி நகரின் முக்கிய கடை வீதியான பகவதியம்மன் கோவில் தெரு, எடமால் தெரு ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதியது. மதுரை சாலை, பெரியகுளம் சாலைகளில் உள்ள கடைகளிலும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால், சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், அழகுசாதன பொருட்கள் போன்றவை விற்பனை செய்வதற்காக இந்த சாலைகளில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
போக்குவரத்து நெரிசல்
தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பொருட்கள் வாங்க குவிந்ததால் தேனியில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. குறிப்பாக தேனியில் நேற்று வாரச்சந்தை செயல்படும் நாள் என்பதால் மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கம்பம் சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதாலும், பொருட்கள் வாங்க வெளியூர்களில் இருந்து பலரும் தேனிக்கு வந்ததாலும் தேனி பழைய பஸ் நிலையம், கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு பயணிகள் ஏறினர். நீண்ட தூர பயணங்களுக்கு கூட பஸ்களில் நின்றுகொண்டே பயணிக்கும் நிலைமை ஏற்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் 5 துணை சூப்பிரண்டுகள், 17 இன்ஸ்பெக்டர்கள், 241 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தேனி நகர் உள்பட முக்கிய நகரங்களில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
கடைவீதிகளில் கூட்டங்களை ஒழுங்குபடுத்த 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. வாகன தணிக்கை செய்வதற்கு 29 குழுக்கள், குற்றத்தடுப்பு பணிகளுக்கு 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள் ரோந்து பணியில் 50 போலீசார் ஈடுபட்டனர்.