கடந்த 8 ஆண்டுகளில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்உற்பத்தி இரண்டு மடங்காக உயர்வு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தகவல்
கடந்த 8 ஆண்டுகளில் என்.எல்.சி. நிறுவனத்தின் மின்உற்பத்தி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்திற்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் மின் உற்பத்தி திறன் 2,740 மெகாவாட்டில் இருந்து 6,061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது 3,321 மெகாவாட் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், சுரங்கத்தின் திறன் ஆண்டுக்கு 30.60 மில்லியன் டன்னில் இருந்து 50.60 மில்லியன் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின்உற்பத்தி
இந்த காலகட்டத்தில் என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் பழுப்பு நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி என்பதில் இருந்து நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி, மரபுசாரா மின் உற்பத்தி (அதாவது, சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கட்டிடங்களின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டசூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி) என்கிற பல்வகை மேம்பட்ட நிலையை அடைந்தது. மேலும், தமிழ்நாட்டின் நெய்வேலியில் தொடங்கி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் அந்தமான் நிக்கோபார் போன்ற பிற மாநிலங்களுக்கும் பரந்து விரிந்து, பான் இந்தியா நிறுவனமாக மாறியுள்ளது. அசாம் மாநிலத்திலும், தனது புதிய திட்டங்களைத் தொடங்க இருக்கிறது.
என்.எல்.சி. அதன் உற்பத்தி திறனில் 45 சதவீதத்திற்கும் மேலான, அனல் மின்சக்தி மற்றும் முழு மரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது.
மின்உற்பத்தியில் பாதிப்பு
கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிலக்கரி இறக்குமதி செய்வதிலும் மின் உற்பத்தி செய்வதிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இன்றைய நிலையில் இந்தியாவின் எரிசக்தி தேவையில் நிலக்கரியின் பங்களிப்பு மிக முக்கியம் என கருதப்படுகிறது. இந்தியாவிலேயே ஒரு ஜிகாவாட் திறனுடைய சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமையை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் பெற்றிருக்கிறது
2017-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்திய போது என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனித்தன்மை வாய்ந்த முறையை செயல்படுத்தியதை பாராட்டுகிறேன். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட போது உள்ள ஏழை எளியவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டங்கள் தீட்டப்படும் என்று கூறினார். அதனடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.