கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி


கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி
x

கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அணிவது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களைப் பெற்று நடைமுறையில் இருக்கிறது.

ஆடை கட்டுப்பாடு

பல வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் சீருடை முறை பின்பற்றப்படுகிறது. தங்கள் நிறுவனப் பணியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோல் டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கறுப்பு நிறத்திலும் கோட்டு அணிவதும் அதற்காகத்தான்.

சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. சிலநேரங்களில் இதனால் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்

2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக் கட்டுப்பாட்டில் சில உத்தரவுகளை பேராசிரியர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர். 2009-ம் ஆண்டு பள்ளி ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டோ, மெல்லிய உடைகளோ அணிந்து வர தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின. 2018-ல் ஒடிசா மாநில பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டில் கேரளாவில் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியைகள் சேலை அணிந்துவர கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர், கேரள கல்வித்துறை அமைச்சகம் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேல் அங்கி அணிய வேண்டும்

தற்போது தமிழக உயர்கல்வித் துறைக்கு, வந்த ஒரு புகார் மனு அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரிக்கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' ('ஓவர் கோட்') அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர்கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கை உத்தரவா? அல்லது யோசனையா? புகார் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருக்கிறதா? என்பது எல்லாம் புரியாத புதிராக இருக்கின்றன. அதை உயர்கல்வித்துறை தெளிவுப்படுத்த வேண்டும். இருப்பினும், உயர்கல்வித்துறை கூறியிருப்பது போல, கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு என்பது அவசியமானதா?, அதை நடைமுறைப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து பேராசிரியர்கள், மாணவர், பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புதிய முயற்சியாக இருக்கும்

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் பி.திருநாவுக்கரசு கூறுகையில், 'கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சில ஆசிரியர்களின் உடைகள் சரியில்லாமல்தான் இருக்கிறது. அனைவரையும் சொல்லவில்லை. உயர்கல்வித்துறை பரிந்துரைத்துள்ள மேல் அங்கி அணிவது என்பது சற்று அதிகம் தான். ஆசிரியர்களை பார்த்தால் ஒரு மரியாதை வரவேண்டும். அதற்கேற்றாற்போல் கண்ணியமான உடை அணிவது அவசியமான ஒன்று. நான் பணிபுரியும் கல்லூரியில் சீருடை இருக்கிறது. ஆகவே எங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. இதை எங்கள் கல்லூரி பாரம்பரியாக செய்து வருகிறது. அனைவரையும் இதேபோல் பின்பற்றச் சொல்லவில்லை.

அதேநேரத்தில் சரியான உடையை அணிந்தால் நல்லது. ஆசிரியரை பார்த்து, மாணவர்களும் அதேபோல் வரவேண்டும். அதற்கேற்றபடி ஆசிரியர்கள் உடை அணிவது சரியாக இருக்கும்' என்றார்.

மிகவும் அவசியமானது

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியை விஜயலட்சுமி:- 'மேல் அங்கி' அணிவதால், தயக்கமும், கூச்சமுமின்றி எளிதாக மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிகிறது. சேலை அணிந்து, அதன் மீது மேல் அங்கி அணிவது மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்களை வேறுபடுத்தி காண்பிப்பதுடன், எந்த ஒரு சிரமமும் இன்றி பாடம் நடத்த முடிகிறது. மேலும் மாணவர்களும் கவனச்சிதறலின்றி பாடத்தை கவனிக்க ஏதுவாகிறது. இதன்படி ஆசிரியர் என்ற தனித்துவம் அறிந்து, மாணவர்கள் எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் படித்து, நல்ல முறையில் மேன்மை அடைய முடியும். எனவே கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி அணிவது என்பது மிகவும் அவசியமானது.

மரியாதையை ஏற்படுத்தும்

அரியலூர் அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியை அனிதா:- பேராசிரியர்களை கோட் அணிய சொல்வது வரவேற்கத்தக்கது. இதனால் அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை போன்று காட்சி அளிக்கும். பேராசிரியர்களுக்கு மரியாதைக்குரியதாக இருக்கும். அனைத்து பேராசிரியர்களையும் ஒரே மாதிரியாக காண முடியும். மாணவர்களின் பார்வையிலும் மரியாதையை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால் வெயில் காலங்களில் 'ஓவர் கோட்' அணிவது மிகவும் சிரமமாக இருக்கும்.

வேறுபடுத்தி காட்டும்

அரசு கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை ஜோதி:- அனைத்து கல்லூரிகளிலும் பேராசிரியர்கள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் என்பது சரியானதுதான். ஏனெனில் மாணவர்களிடம் இருந்து பேராசிரியர்களை வேறுபடுத்தி காட்டும். மாணவர்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்த சீருடை அணிவதுபோன்று, பேராசிரியர்களுக்கு 'ஓவர் கோட்' அணிவது இருக்கும். பெண் ஆசிரியர்கள் எந்தவித கூச்சமும் இன்றி வகுப்பு எடுக்க, இது சரியான வழியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

கவனச்சிதறலின்றி கற்பிக்கலாம்

குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பயோ தொழில்நுட்பத்துறை தலைவரான பேராசிரியை மாலதிசேகர்:- தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், பேராசிரியைகள் கோட் அணிந்து பணி செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். அரசு கல்லூரிகளில் இதேபோன்ற நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். இது பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு மதிப்பான ஒன்றாகும். இதனால் வகுப்புகளில் பெண் விரிவுரையாளர்கள் இலகுவாக, எளிதாக, அதேநேரத்தில் கவனச்சிதறல் இன்றி மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க இயலும். இவ்வாறு பணிபுரியும்போது உள்ளார்ந்த கற்பித்தல் திறனை வெளிப்படுத்திட முடியும்.

அச்சப்பட தேலையில்லை

வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி தமிழ் துறை தலைவர் செந்தமிழ்செல்வி:- அனைவருக்கும் ஆடை கட்டுப்பாடு தேவையான ஒன்று. ஆசிரியர்கள் கோட் அணிவது நல்ல விஷயமே. கல்லூரிகளுக்கு மாணவிகள் கல்லூரி வேலை நாட்களிலும். பண்டிகை நாட்களிலும் அவரவர் வசதிக்கேற்ப சேலை அணிந்து வருவதால் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுகிறது. சில நேரங்களில் ஆசிரியரா அல்லது மாணவியா என்ற குழப்பமும் ஏற்படுகிறது. எனவே பேராசிரியர்கள் கோட் அணிவதால் அனைத்து மாணவர்கள் மத்தியில் மரியாதை கூடும். முன் உதாரணமாகவும் இருக்கும். மேலும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்களோ என்ற அச்சப்படவும் தேவையில்லை.

கவனச்சிதறல் தவிர்க்கப்படும்

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி இயற்பியல் பிரிவு இணை பேராசிரியர் ராஜமூர்த்தி:- கல்லூரி பேராசிரியர்கள் மேல் அங்கி அணிவது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக இளம் வயது பேராசிரியைகள் எந்தவித தயக்கமும் இன்றி, மாணவர்களிடம் உரையாடுவதற்கும், கரும்பலையில் எழுதுவதற்கும், வீடியோ காட்சிகளை மாணவர்களுக்கு விளக்குவதற்கும், மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளிப்பதற்கும், மேல் அங்கி அணிவது அவர்களுக்கு துணை புரிகிறது. மேல் அங்கி அணிவது மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்களை வேறுபடுத்தி காட்டுவது மட்டுமின்றி, மாணவர்களின் கவனச் சிதறலும் தவிர்க்கப்படுகிறது. எனவே மேல் அங்கி அணிவது என்பது அனைத்து பேராசிரியர்களுக்கு, குறிப்பாக பேராசிரியைகளுக்கு அவசியமாகிறது.

ஒரே நிறத்தில் 'ஓவர் கோட்'

வேப்பூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் மணிகண்டன்:- கல்லூரி பேராசிரியர்கள் 'ஓவர் கோட்' அணிவது, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மத்தியில் தனித்துவமாக அமையும். இதனால் ஆசிரியர்களுக்கு மரியாதை கிடைக்கும். மாணவர்களுக்கு பணிவு ஏற்படும். கவனச்சிதறலின்றி படிப்பதற்கான ஆர்வமும் வரும். பேராசிரியைகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிவது கட்டுப்படுத்தப்படும். மாணவிகளும் ஆசிரியர்களை போல் உடை விஷயத்தில் பின் தொடர மாட்டார்கள். எனவே பேராசிரியைகள் கோட் அவசியமான ஒன்று. ஓவர் கோட் அனைவரும் ஆசிரியர்கள் என்ற சமநிலை உருவாகிறது. மேலும் ஒரே நிறத்தில் ஓவர் கோட் அணிந்தால் சிறப்பாக இருக்கும்.

மாணவர்களுக்கு முன்மாதிரி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அனுராமன்:- பேராசிரியர்கள் மேல் அங்கி அணிவது குறிப்பாக பேராசிரியைகள் அணிவது, மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே கருதுகிறேன். நான் படிக்கும் அரசு கலைக் கல்லூரியில் இருபால் பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் நேர்த்தியாகவும் மாணவ, மாணவிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும் வகையில் ஆடைகள் அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர். தற்போது பேராசிரியர்கள் மேல் அங்கி அணியும் நடைமுறை, ஒழுங்கீனமாக உடை உடுத்தி கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்மாதிரியாக அமையும் என்று கருதுகிறேன்.

ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டு

விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயக்குமாரின் தந்தை முருகானந்தம்:- கல்லூரி பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிவதை நான் வரவேற்கிறேன். மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்கள் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஓவர் கோட் அணிந்து கல்லூரிக்கு வருவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும் அமையும்.

நடைமுறைக்கு வருமா?

கடந்த 2015-ல் அரசு பள்ளியில் ஆசிரியைகள் மேல் அங்கி அணிய வேண்டும் என்ற உத்தரவு வந்தது. அதன்படி, மதுரை பேரையூர் தாலுகாவில் உள்ள வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மேல் அங்கி அணிந்து வருவது அப்போது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் அது காலப்போக்கில் மாறியது.

அதேபோல், தற்போது உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டது போன்ற ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வருமா? அல்லது அது வெறும் சுற்றறிக்கையாகவே போய்விடுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Next Story