கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி


டாக்டர்கள், வக்கீல்கள் போல் கல்லூரி பேராசிரியர்களுக்கு மேல் அங்கி- ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து

திருநெல்வேலி

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீருடை திட்டத்தை கொண்டு வந்தார். மாணவர்களிடம் சமத்துவ உணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போது தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையால் அத்திட்டம், பலவித பரிணாமங்களைப் பெற்று நடைமுறையில் இருக்கிறது.

ஆடை கட்டுப்பாடு

பல வர்த்தக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் சீருடை முறை பின்பற்றப்படுகிறது.

தங்கள் நிறுவனப் பணியாளர்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

அதுபோல் டாக்டர்கள் வெள்ளை நிறத்திலும், வக்கீல்கள் கறுப்பு நிறத்திலும் கோட்டு அணிவதும் அதற்காகத்தான்.

சில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. சிலநேரங்களில் இதனால் சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.

ஜன்னல் வைத்த ஜாக்கெட்

2008-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆடைக் கட்டுப்பாட்டில் சில உத்தரவுகளை பேராசிரியர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

2009-ம் ஆண்டு பள்ளி ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டோ, மெல்லிய உடைகளோ அணிந்து வர தடைவிதிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

2018-ல் ஒடிசா மாநில பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை அணிந்துவரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டில் கேரளாவில் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியைகள் சேலை அணிந்துவர கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பின்னர், கேரள கல்வித்துறை அமைச்சகம் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேல் அங்கி அணிய வேண்டும்

தற்போது தமிழக உயர்கல்வித் துறைக்கு, வந்த ஒரு புகார் மனு அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரிக்கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உயர்கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கை உத்தரவா? அல்லது யோசனையா? புகார் மீதான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருக்கிறதா? என்பது எல்லாம் புரியாத புதிராக இருக்கின்றன. அதை உயர்கல்வித்துறை தெளிவுப்படுத்த வேண்டும். இருப்பினும், உயர்கல்வித்துறை கூறி இருப்பது போல, கல்லூரி பேராசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு என்பது அவசியமானதா?, அதை நடைமுறைப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பது குறித்து பேராசிரியர்கள், பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வரவேற்பு

நெல்லையை சேர்ந்த பேராசிரியர் பாண்டியன்:-

பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வித்தியாசம் தெரியும் வகையில் பேராசிரியர்கள் நன்றாக உடை அணிந்து அதன் மீது மேல் அங்கி அணிந்து பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதை வரவேற்கிறோம். அனைத்து பேராசிரியர்களும் மேல் அங்கி அணியும்போது வேறுபாடு தெரியாது. மேலும் அவர்களின் மதிப்பை உயர்த்தி காட்டும். ஆடையை பார்த்ததும் பேராசிரியர்கள் என அறிந்து கொண்டு மாணவர்கள் உரிய மரியாதை கொடுப்பார்கள்.

நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியை ஜெயந்தி:-

தற்போதுள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் ஆடை கட்டுப்பாடு நிச்சயம் வேண்டும். பேராசிரியைகள் சேலை அணிந்து அதற்கு மேல் அங்கி அணிந்து பணிக்கு வர வேண்டும். தேவையில்லாத உடைகளை அணிந்து கொண்டு பணிக்கு வரும்போது, அது கலாசார சீர்கேடுக்கு வழிவகுக்கும். எனவே, பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து இருப்பதை வரவேற்புக்குரியது.

கண்ணாடி வளையல்-கொலுசு

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி:-

மகளிர் கல்லூரியை பொறுத்த வரை பேராசிரியைகள் கண்ணியமான முறையில் சேலை அணிந்து செல்வதே போதுமானது ஆகும். ஆண், பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரிகளில் பேராசிரியைகள் மேல் அங்கி அணிந்து செல்வது என்பது வரவேற்கக்கூடியது. பொதுவாக பேராசிரியைகள் கண்ணாடி வளையல், அதிக ஒலி எழுப்பும் கொலுசு போன்றவற்றை அணிந்து வருவது கூடாது. கண்ணாடி வளையல் அணிந்து கொண்டு கரும்பலகையில் எழுதும்போது சத்தம் எழும் என்பதால் மாணவர்கள் கவனம் சிதறும். இதேபோல் கொலுசு அணிந்து கொண்டு செல்லும்போது ஏற்படும் சத்தத்தாலும் கவன சிதறல் ஏற்படும். எனவே அவற்றை தவிர்ப்பது சிறந்தது.

தச்சநல்லூரை சேர்ந்த தங்கவேலு:-

கல்லூரிகளில் பேராசிரியர்களும் ஜீன்ஸ் பேண்ட், சட்டை அணிந்து செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது, அவர்களுக்கும், மாணவர்களுக்கும் வித்தியாசம் தெரிவது இல்லை. சில பேராசிரியர்கள் மாணவர்களை விட இளமையாக இருப்பது போல் தெரிகிறது. எனவே ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பது வரவேற்கக்கூடியது தான். முன்பு கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மேல் அங்கி அணிந்து தான் பணிக்கு வருவார்கள். அவர்கள் அந்த ஆடையில் மிடுக்காக வருவதை பார்த்ததும், மாணவர்கள் எளிதில் அடையாளம் கண்டு உரிய மரியாதை அளிப்பார்கள். ஆகையால் ஆடை கட்டுப்பாடு அவசியமானது தான். அதேபோல் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கும் ஆடை அணிவது, முடி வெட்டுவது போன்றவற்றில் விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தலாம்.

பாதுகாப்பானது

தென்காசியை சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் தங்கலட்சுமி:-

பொதுவாக மேல் அங்கி என்பது பேராசிரியைகளுக்கு பாதுகாப்பானது தான். ஆனாலும் எப்போதும் மேல் அங்கி அணிவது என்பது முடியாத காரியம். குளிர் நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வெப்பம் உள்ள நேரங்களில் அதனை அணிவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஆய்வகங்களில் மாணவ-மாணவிகள் மேல் அங்கி அணிந்து இருப்பார்கள். அப்போது பேராசிரியர்களும் அணிந்தால் இருவருக்கும் வித்தியாசம் தெரியாது. அவ்வாறு வரும் பட்சத்தில் இருவருக்கும் உள்ள மேல் அங்கிகளில் வண்ணங்களை மாற்றி அமைத்தால் தான் வித்தியாசப்பட முடியும்.

தென்காசியை சேர்ந்த தனியார் கல்லூரி துணை முதல்வர் எஸ்.ராமர்:-

பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு என்பது வரவேற்கக்கூடியது தான். பேராசிரியைகளுக்கு இது அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த ஆடை அணியும்போது அது பேராசிரியர்களை மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும். அதே நேரத்தில் வகுப்புகளில் கரும்பலகையில் எழுதி விளக்கும்போது, அந்த ஆடை சற்று அசவுகரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆன்லைன் வகுப்பு மற்றும் புரொஜெக்டர்கள் மூலம் வகுப்பு நடத்தும்போது பயனுள்ளதாக இருக்கும்.

கவனம் சிதறாது

வக்கீல் சுப்பிரமணியன்:-

பேராசிரியர்கள் மேல் அங்கி அணிவது நல்லது தான். குறிப்பாக பேராசிரியைகளுக்கு பாதுகாப்பான உடை. அவர்கள் அவ்வாறு ஆடை அணிந்து வகுப்பு நடத்தும்போது மாணவர்களின் கவனம் சிதறாது. பாடத்தை ஒழுங்காக கவனிப்பார்கள். பொதுவாக பேராசிரிய-பேராசிரியைகள் ேமல் அங்கி அணிந்து கல்லூரிக்கு வரும்போது, அவர்கள் மீது மாணவ-மாணவிகளுக்கு தாமாகவே ஒரு மரியாதை வரும். எனவே, இது சிறந்த முயற்சிதான்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2015-ல் அரசு பள்ளியில் ஆசிரியைகள் மேல் அங்கி அணிய வேண்டும் என்ற உத்தரவு வந்தது. அதன்படி, மதுரை பேரையூர் தாலுகாவில் உள்ள வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மேல் அங்கி அணிந்து வருவது அப்போது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் அது காலப்போக்கில் மாறியது.

அதேபோல், தற்போது உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டது போன்ற ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வருமா? அல்லது அது வெறும் சுற்றறிக்கையாகவே போய்விடுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Next Story