பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்
திருமயம் ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்
திருமயம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க அரசு அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவில் கோட்டை, மணவாளங்கரை, சந்தைப்பேட்டை, பாப்பாவயல் உள்பட 5 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளது. தற்போது ஊராட்சி மூலம் ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இருக்கும் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பல்வேறு பகுதிகள் மேடான பகுதியாக இருப்பதால் முழுமையாக பொதுமக்களுக்கு செல்லவில்லை. பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிக்கும் நிலையில் உள்ளனர்.
குடிநீர் பற்றாக்குறை
இதனால் பொதுமக்கள் மிகவும் குடிநீர் பற்றாக்குறையால் சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஆங்காங்கே வால்வுகள் வைத்து முடிந்த அளவு பணியாற்றி வருகின்றனர். மேலும் இன்னும் 840 இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க 5 தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் குடிநீர் ஏற்ற முடியாமல் எந்த பயனும் இல்லாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது.
சில மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்ற ஆழ்குழாய் கிணறுகள் எதுவும் போடாமல் காலதாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் காலங்கள் வெயில் காலம் என்பதால் பொதுமக்களுக்கு அதிகமான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். ஊராட்சி மூலம் போதுமான குடிநீர் வழங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை பார்வையிட்டு கட்டியுள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் விரைவாக தண்ணீரேற்றி பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்று ஊராட்சி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருமயம் ஊராட்சி கோட்டை பகுதியை சேர்ந்த சங்கீதா:- கடந்த ஒரு மாதங்கள் முன்பு வரை தெரு குழாய்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தோம். தற்சமயம் புதிதாக ஒரு திட்டம் தொடங்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் போதுமான குடிநீர் இதுவரை வரவில்லை.
சில சமயம் குறைவாக வருகிறது. சில நாட்கள் தண்ணீர் வருவதே கிடையாது. ஊராட்சியில் கேட்டபோது புதிய தண்ணீர் தொட்டி இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை எனக் கூறி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்
பாப்பாவயலை சேர்ந்த மீனா:- அரசு நிதியில் புதிய 5 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி எந்த பயனும் இல்லாமல் இருந்து வருகிறது. பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள கொள்ளளவு நீரை வைத்து எப்படி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க முடியும். இந்த பகுதிகளில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கியும் முழுமையான தண்ணீர் வராமல் இடுப்பளவு பள்ளம் தோன்றி தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இது பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்றத்தில் தெரிவித்து அவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முழுமையாக தண்ணீர் வழங்க முடியவில்லை. வறட்சியான காலங்கள் என்பதால் புதிதாக கட்டப்பட்ட அனைத்து தொட்டிகளையும், பொதுமக்கள் நலன் கருதி விரைவாக பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுமையான குடிநீர் வழங்கப்படும்
ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர்:- இந்த திட்டம் அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் முழுமை அடையாமல் இருந்து வருகிறது. இந்த திட்டத்தை டெண்டர் எடுத்து வேலை பார்ப்பவர்கள் பாதி பேருக்கு இணைப்பு வழங்கியும் பாதி பேருக்கு இணைப்பு வழங்காமலும் உள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி மூலம் நாங்கள் அனைத்து அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து நேரடியாகவும் மனுக்கள் மூலமாகவும் தகவல் தெரிவித்துள்ளோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை தொட்டிகள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தால் தான் திருமயம் ஊராட்சி பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்க முடியும். எனவே பணிகளை சம்பந்தப்பட்டவர்கள் விரைவாக முடிக்க வேண்டும்.