காலை உணவு திட்டத்துக்கு கையெழுத்திட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சி: முதல்-அமைச்சர் பெருமிதம்


காலை உணவு திட்டத்துக்கு கையெழுத்திட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சி: முதல்-அமைச்சர் பெருமிதம்
x

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு கையெழுத்திட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நல திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

பெருமகிழ்ச்சி

சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம் தான் காலை உணவு திட்டம். வயிற்றுக்கு நிறைவும் - செவிக்கு அறிவும் ஊட்டுபவையாக பள்ளி சாலைகளை மாற்றும் முயற்சி இது.

லட்சக்கணக்கான மாணவ கண்மணிகளின் மனம் குளிர நான் காரணம் ஆகிறேன் என்பதே எனக்கு ஏற்பட்டுள்ள பெருமகிழ்ச்சி.

திராவிட இயக்க கொள்கைகளில் உணர்வுப்பூர்வமாகத் தோய்ந்துபோன எனக்கு, ஏழை குழந்தைகளின் பள்ளி படிப்பை ஊக்குவிக்கும் இந்த திட்டம் ஒரு கனவுத் திட்டம். முதல்-அமைச்சராக பெருமிதம் தரும் திட்டம்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப் பகுதிகள் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதற்கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சமைப்பதில் எடுத்துக் கொள்கிற சிரத்தையோடு, தங்கள் அன்பை கொட்டி தூய்மையுடன் உணவைப் பரிமாற களப்பணியாளர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உறுதிப்படுத்த வேண்டும்

இந்த திட்டம் மகத்தான வெற்றி அடைவதை மக்கள் பிரதிநிதிகளும். பொதுமக்களும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டி உறுதிப்படுத்த வேண்டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கி தருவதும், கல்வியை பரவலாக்குவதன் மூலம் அதிகாரத்தில் அடித்தட்டு மக்களை அமர வைப்பதும் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள்.

அந்த கொள்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை திராவிட இயக்கம் கண்டுள்ளது என்பது தமிழ்நாடு பெருமைப்படத்தக்க ஒன்று.

நாடே திரும்பி பார்க்கும்

பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் 'முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்' முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

இந்த முன்னோடியான திட்டத்தின் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும். பிற மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சியின் இந்தத் திட்டம் பின்பற்றப்படும் என்பதிலும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story