அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதிகள் தயார்
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதிகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு தயாராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஊட்டி,
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதிகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு தயாராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாரத்தான்
நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில், ஊட்டியின் 200-வது ஆண்டை பிரபலப்படுத்தும் நோக்கில் மாரத்தான் 4 பிரிவுகளாக ஊட்டியில் நேற்று நடைபெற்றது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தானை தொடங்கி வைத்து, 30 கிலோ மீட்டர் நடைபெற்ற மாரத்தானில் கலந்துகொண்டு ஊட்டியில் இருந்து கோத்தகிரி வரை ஓடினார். அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 மாதமாக உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று இல்லாத நிலை நீடித்து வந்த நிலையில், சமீப காலமாக ஒமைக்ரான் உருமாற்றம் ஏற்பட்டு ஒய்.பி.ஏ. புதிய வைரஸ் தற்போது பரவி வருகிறது.
மருந்து, மாத்திரைகள்
இந்தியாவில் தினமும் 50-க்கும் கீழ் இருந்த கொரோனா தொற்று, தற்போது 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 139 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வகை தொற்றானது மருத்துவமனைகளில் அதிகளவு பரவுவதால், தமிழ்நாட்டில் உள்ள 11,333 அரசு மருத்துவமனைகளில் உள் மற்றும் புற நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிந்து உள்ளனர். அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு படுக்கை, ஆக்சிஜன் வசதியுடன் போதுமான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் தயார் நிலையில் இருக்கிறது. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வகை கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என மருத்துவ வல்லுனர்களும், அறிவியல் ஆய்வாளர்களும் கூறியுள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.
தனிமைப்படுத்தி கண்காணிப்பு
தற்போது வெளிநாடுகளில் இருந்து சென்னை, கோவை, திருச்சி விமான நிலையங்களுக்கு வரும் துபாய், சிங்கப்பூர் பயணிகளுக்கு தொற்று அதிகளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு உள்ள பயணிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊட்டி படகு இல்லத்தில் விளையாட்டு பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாலுசாமி, மண்டல சுற்றுலா வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், தாசில்தார் ராஜசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.