பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை:
பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
பத்மநாபபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் அருள் சோபன் தலைமை தாங்கினார். ஆணையர் லெனின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் உண்ணிகிருஷ்ணன், நாகராஜன், பிரியதர்ஷினி, கிருஷ்ணபிரசாத், ஷீபா, வினோத்குமார், ஜெயசுதா, சுலைகா பேகம், மும்தாஜ், நாதிறா பானு, ஷேக்முகமது, சபீனா, கீதா, ஜெமீலா ஆரோக்கிய ராணி, அபிலா, சுகந்தி, சிவா, ஸ்ரீதேவி, செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் குடிநீர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடந்தது.
கவுன்சிலர் எதிர்ப்பு
அப்போது தலைவர் பேசும் போது, '2014 -15-ல் அவசர கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்தான் குடிநீர் கட்டணம் தொடர்பான அரசாணை போடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய முடியாது. வேண்டுமானால் மக்கள் பாதிக்காத வகையில் குறைப்பதற்கு வழி இருக்கிறதா என ஆலோசிக்கலாம்' என்றார்.
தொடர்ந்து கூட்டப்பொருள் குறித்த தீர்மானங்களை படிக்க தொடங்கியபோது கவுன்சிலர் செந்தில்குமார் குறிக்கிட்டு 'பத்மநாபபுரம் கோட்டை சுவரில் இருக்கும் படத்தை எடுத்து அப்புறப்படுத்த உத்தரவிட்டது யார்? என கேட்டவாறு தலைவர் இருக்கையின் முன்பு தரையில் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. கான்சிலர்கள் குரல் எழுப்பியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
வெளிநடப்பு
பின்னர், மதியம் 2 மணிக்கு கூட்டம் மீண்டும் தொடங்கியதும் கூட்ட பொருள் குறித்து படிக்க தொடங்கியது போது கவுன்சிலர் செந்தில்குமார் 'நான் கேட்டதற்கு பதில்கூறிய பிறகு கூட்ட பொருள் படிக்கலாம்' என கூறியவாறு தலைவர் இருக்கை நோக்கி வந்தார். அப்போது தி.மு.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
உடனே தலைவர் 'கூட்ட தீர்மானம் குறித்து முதலில் முடிவு செய்வோம்' என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் செந்தில்குமார் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக 7 பா.ஜனதா கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து தி.மு.க. மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.