காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பாதயாத்திரையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பாதயாத்திரையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
பாதயாத்திரை
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுமையும் பாதயாத்திரை நடத்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 9-ந் தேதி முதல் பாதயாத்திரை காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 4-ம் நாள் சிவகங்கையில் இருந்து மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மா, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் வேலாயுதம், மதியழகன், இருதயராஜ், பாட்டம் கதிரேசன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி இமயமெடோனா, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா ராணி மற்றும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சோணை, சார்லஸ், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விலைவாசி உயர்வு
இந்த பாதயாத்திரை சிவகங்கை காஞ்சிரங்காலில் தொடங்கி நகரின் முக்கிய வீதியின் வழியாக சென்று அரண்மனை வாசலில் வந்து முடிவடைந்தது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இந்த பாதயாத்திரையில் ப.சிதம்பரம் கையில் காங்கிரஸ் கொடியுடன் நடந்து வந்தார். பின்னர் சிவகங்கை அரண்மனை வாசலில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆண்டது. இந்தியா பெரிய வல்லரசாக உருவாக காங்கிரஸ்தான் காரணம். இந்த பாதயாத்திரை சுதந்திர தினத்தை முன்னிட்டும், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்தும் நடக்கிறது. இந்தியாவில் மொத்த விலைவாசி 15 சதவீதமும், சில்லறை விலைவாசி 7 சதவீதமும் உயர்ந்துள்ளது. இன்று 18-ல் இருந்து 25 வயது உடைய இளைஞர்களில் 25 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. துன்பத்தில் வாடும் மக்களுக்கு உதவிட காங்கிரஸ் கட்சி இருக்கிறது. உங்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.