ராமேசுவரத்திற்கு பாதயாத்திரையாக வந்த முதியவர்
உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு பாதயாத்திரையாக வந்த முதியவர்
காரைக்குடி,
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 70). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து பாதயாத்திரையாக ராமேசுரம் செல்ல முடிவு செய்தார். கடந்தாண்டு மே 22-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி பகுதியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டார். பல்வேறு மாநிலங்கள் வழியாக அவர் நேற்று முன்தினம் காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கு நடந்து சென்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- உலக நாடுகள் முழுவதும் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், சண்டையின்றி சமாதானத்தை உலக நாடுகள் கடைபிடித்து மகிழ்ச்சியுடன் வாழவும், உலகில் கொடிய நோய் பரவாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாதயாத்திரை பயணத்தை தொடங்கி உள்ளேன். கடந்தாண்டு மே மாதம் 22-ந்தேதி எனது பாதயாத்திரையை தொடங்கி நான் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழகத்தை வந்தடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவா் தனக்கு தேவையான உடைமைகளை டோலி போன்று கட்டி எடுத்துச் சென்றார்.