அணைகளில் திறக்கப்படும் உபரிநீர் அளவு குறைந்தது: சுவர் இடிந்து விழுந்து 30 வீடுகள் சேதம் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை


அணைகளில் திறக்கப்படும் உபரிநீர் அளவு குறைந்தது:  சுவர் இடிந்து விழுந்து 30 வீடுகள் சேதம்  நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை சற்று குறைந்ததை அடுத்து, அணைகளில் திறக்கப்படும் உபரிநீர் அளவு குறைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் இதுவரையில் 30 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து சேதமாகி இருப்பதுடன், நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கம் கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8.30 மணியில் இருந்து 11.30 மணி வரைக்கும் மழை நீடித்தது.

இந்த மழையால் தாழ்வான பகுதியில் மேலும் மழைநீர் தேங்க தொடங்கியது. இதன் பின்னர் ஓய்ந்து இருந்த மழை, மாலை 5 மணிக்கு மேல் சாரல் மழையாக சிறிது நேரம் நீடித்தது.

நீர் திறப்பு குறைப்பு

மழைப்பொழிவு குறைந்ததால், மாவட்டத்தில் உள்ள 2 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்து காணப்பட்டது. அந்த வகையில் கோமுகி அணையின் மொத்த நீர்மட்டமான 46 அடியில் தற்போது 44 அடியில் தண்ணீர் இருப்பு உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இந்த நீர் அப்படியே கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. ஆனால், மழை குறைவால் நேற்று நீர் வரத்தானது வினாடிக்கு 800 கனஅடியாக சரிந்தது. இந்த நீர் அப்படியே உபரிநீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

அதேபோல் மற்றொரு அணையான மணிமுக்தா அணையின், மொத்த நீர்மட்டம் 36 அடியில் 34 அடி என்கிற நிலையில் நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 700 கனஅடி நீர் வந்த நிலையில், உபரிநீராக மணிமுக்தாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் வினாடிக்கு 1550 கனஅடி என்கிற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

30 வீடுகள் சேதம்

மாவட்டத்தில் பருவமழையில் பல இடங்களில் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 30 கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி தாலுகாவில் 2 ஓட்டு வீடுகள், 6 கூரை வீடுகள், சங்கராபுரம் தாலுகாவில் 3 வீடுகள், சின்னசேலம் 5 வீடுகள், கல்வராயன்மலை 3 வீடுகள், உளுந்தூர்பேட்டை 9 வீடுகள், திருக்கோவிலூர் 2 வீடுகளிலும் சுவர் இடிந்து சேதமாகி இருக்கிறது.

மேலும், ரிஷிவந்தியம் ஒன்றியம் வானபுரம் வடக்கு மேடு அருந்ததியர் காலனி குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை மழையால் சேதம் அடைந்துள்ளது. விவசாய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வாணாபுரம் பெரிய ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருவதால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிகிடக்கிறது. சுமார் 100 ஏக்கர் பயிர்கள் மூழ்கிகிடக்கும். இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


Next Story