தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்


தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை பகுதியில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளை பகுதியில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல் சாகுபடி

தோவாளை கால்வாய் மூலம் செண்பகராமன்புதூர், தோவாளை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த முறையும் அதே போல் விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.

கடந்த ஜூ்லை மாதம் இறுதியில் இருந்து கால்வாயில் 5 நாட்கள் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். 5 நாள் தண்ணீரை அடைத்து விடுவார்கள். இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி அழகியபாண்டியபுரம் மேல உலக்கை அருவி பகுதியில் தூவச்சி என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் கால்வாயில் தண்ணீர் திறந்து விடவில்லை.

கருகும் நிலையில் பயிர்

தோவாளை பகுதியில் மேட்டுக்கால், கரிசல் பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு 55 நாள் பயிராக நிற்கிறது. இந்த நிலையில் உடைப்பு சீரமைக்கப்படுவதாக கால்வாயில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் பயிர்செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வயல்களில் திடீர் என்று இறங்கி நூதன போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி புதூர் முத்து கூறியதாவது:-

நான் தோவாளை கரிசல் சாலையில் மேட்டுக்கால் பகுதியில் 2.75 ஏக்கரில் குத்தகை முறையில் நெல் விவசாயம் செய்துள்ளேன். சுமார் 10 நாட்களாக வயல்களில் தண்ணீர் பாயாததால் பயிர் கருக தொடங்கி உள்ளது. 1 ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் செலவாகிறது. பயிர் இருக்கும் நிலையை பார்த்தால் கடன் வாங்கி பயிர்செய்த நான், என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன். உடைப்பை சரிசெய்கிறோம் என்று தண்ணீரை அடைத்துவிட்டனர். அதிகாரிகள் மனம் வைத்தால் 24 மணி நேரத்தில் அடைப்பை சரிசெய்திருக்கலாம். தற்போது முறை வைத்து தான் தண்ணீர் திறக்கிறார்கள். கடைசியாக கால்வாயில் கடந்த வெள்ளிக்கிழமை தண்ணீர் வந்து எட்டி பார்த்தது. ஆனால் வயலுக்கு வரவில்லை சனிக்கிழமை அடைத்துவிட்டார்கள். பயிர்கருகிறது. 5 நாள் திறப்பு 5 நாள் அடைப்பு என்ற முறையை 5 நாள் திறப்பு 3 நாள் அடைப்பு என மாற்ற வேண்டும். பயிர்களை காப்பாற்ற அரசு தலையிட்டு உடனடியாக தண்ணீர் வர நடவடிக்கை எடுத்து எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story