தஞ்சை மாவட்டத்தில் இலக்கை நெருங்கும் குறுவை சாகுபடி


தஞ்சை மாவட்டத்தில் இலக்கை நெருங்கும் குறுவை சாகுபடி
x

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை நெருங்கி வருகிறது. இதுவரை 97 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை நெருங்கி வருகிறது. இதுவரை 97 ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. கல்லணைக்கால்வாய் பாசன வாய்க்கால்களில் பல இடங்களில் தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நடவுப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

97,500 ஏக்கரில் நடவு

காவிரி டெல்டாவில் சாகுபடிக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வழக்கத்தை விட கூடுதலாக குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக தஞ்சை மாவட்டத்தில் போதுமான விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெற இலக்குநிர்ணயிக்கப்பட்டது. இதில் தற்போது வரை 97 ஆயிரத்து 500 ஏக்கர் வரை நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன.தஞ்சை மாவட்டத்தில் இலக்கை எட்டுவதற்கு இன்னும் 10 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாக்கி உள்ளது. வழக்கமாக குறுவை சாகுபடி பணிகள் ஜூன், ஜூலை மாதம் வரை நடைபெறும். இந்த மாதம் முழுவதும் குறுவை நடவுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் இலக்கை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீர் செல்லவில்லை

தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கல்லணைக்கால்வாய் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு கல்லணைக்கால்வாயில் 1,901 கன அடி வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் பாசன வாய்க்கால்களில் இன்னும் தண்ணீர் செல்லாமல் உள்ளது.இதனால் ஆற்றுப்பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள். எனவே கல்லணைக்கால்வாயில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் எடுக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும். அவ்வாறு சென்றால் விவசாய பணிகளையும் விரைந்து மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே கல்லணைக்கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறப்பதற்கு வசதியாக மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம்கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டை போல அதிகரிக்கும்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக 1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகமாக நடைபெறும் என்று வேளாண் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story